Published : 18 Jan 2021 03:14 AM
Last Updated : 18 Jan 2021 03:14 AM
தென்காசி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து, பாசிப்பயறு செடிகள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தொடர் மழையால் நனைந்து முளைத்து விட்டன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக பெய்த மழையால் அணைகள், குளங்களுக்கு நீர் வரத்து ஏற்பட்டது. இடைவிடாது பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்ட பயிர்கள் மழையில் நனைந்து விட்டன.
தொடர்ந்து மழை பெய்ததால் விளைந்த பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்தனர். நிலம் ஈரமாக இருந்ததாலும், அறுவடை தாமதமானதாலும் மழையில் நனைந்த உளுந்து, பாசிப்பயறு முளைத்து வீணாகிவிட்டன. இதனால் விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஊத்துமலை அருகே உள்ள அண்ணாமலைபுதூர், பலபத்திரராமபுரம், மருக் காலங்குளம், மருதாத்தாள்புரம், தங்கம்மாள்புரம், மேலக்கலங்கல், கீழக்கலங்கல், கங்கணாங்கிணறு, வேலாயுதபுரம், அமுதாபுரம், மாவிலியூத்து, கருவந்தா உட்பட பல்வேறு பகுதிகளில் மழையில் நனைந்து சேதமடைந்த பயிர்களை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவ பத்மநாதன் மற்றும் நிர்வாகிகள் விவசாயிகளுடன் சென்று பார்வயிட்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “ஒரு ஏக்கரில் உளுந்து நன்றாக விளைந்தால் 4 முதல் 5 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ உளுந்து சுமார் 70 ரூபாய்க்கு விற்பனையாகும். இதனால் ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கும்.
ஆனால், மழையில் நனைந்து பயிர்கள் அனைத்தும் முளைத்து விட்டதால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தது வீணாகிவிட்டது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து சிவ பத்மநாதன் கூறும்போது, “தென்காசி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் வரை விவசாய பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT