Published : 17 Jan 2021 02:10 PM
Last Updated : 17 Jan 2021 02:10 PM

காளையார்கோவில் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 500 கரி மூட்டைகள்: தொழிலும் பாதிக்கப்பட்டதால் தொழிலாளர்கள் வேதனை

காளையார்கோவில் அருகே கண்ணார்குளம் பகுதியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கரிமூட்டக் கூடம்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே ஆற்று வெள்ளத்தில் 500 கரி மூட்டைகள், பல டன் விறகுகள் அடித்து செல்லப்பட்டன. தொழிலும் பாதிக்கப்பட்டதால் தொழிலாளர்கள் வேதனை அடைந்தனர். வறட்சி மாவட்டமான சிவகங்கையில் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் வளர்கின்றன. இதனால் காளையார்கோவில், இளையான்குடி, மானாமதுரை பகுதிகளில் ஏராளமானோர் கரிமூட்டம் தொழில் செய்கின்றனர்.

சீமைக்கருவேல மரங்களை உலையில் அடுக்கி வைத்து மூட்டம் போடுவர். ஒரு வாரம் கழித்து கரியைப் பிரித்தெடுப்பர். பிரித்தெடுக்கப்படும் கரியை தூள் கரி, தூர் கரி, உருட்டு கரி, குச்சி கரி, மண் கரி என 5 வகையாக பிரிப்பர். கரிகளின் வகைகளுக்கு ஏற்ப ஊதுபத்தி, கொசுவர்த்திச் சுருள், சிமென்ட் தயாரிப்பு, தனியார் மின் உற்பத்தி நிலையங்கள், ஓட்டல்கள், பட்டறைகள், சிமெண்ட் ஆலைகளில் பயன்படுகின்றன.

சிவகங்கை மாவட் டத்தில் தயாரிக்கப்படும் கரிகள் தமிழகம் முழுவதும் அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், காளையார்கோவில் அருகே கண்ணார்குளத்தில் ராஜேந்திரன் என்பவர் கரிமூட்டம் தொழில் செய்து வருகிறார். அப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், அங்குள்ள நாட்டாறுகால் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கண்ணார்குளம் பகுதியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கரித் துண்டுகளை சேகரிக்கும் தொழிலாளர்கள்.

இதில் ராஜேந்திரனின் கரிமூட்டம் கூடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 500 மூட்டைக் கரி மற்றும் பல டன் விறகுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் அவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர் மழையால் காளையார்கோவில், இளையான்குடி, மானாமதுரை பகுதிகளில் கரிமூட்டத் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இத னால் தொழிலாளர்கள் வேதனை அடைந் துள்ளனர். இதுகுறித்து ராஜேந்திரன் கூறிய தாவது: ஒரு மூட்டை கரி ரூ.600-க்கு விற்கப்படுகிறது. கரி மூட்டைகள், விறகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உலையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கரிமூட் டக் கூடம் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந் துள்ளதால் தொடர்ந்து தொழிலும் செய்ய முடியாது. இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x