Published : 17 Jan 2021 03:15 AM
Last Updated : 17 Jan 2021 03:15 AM

தூத்துக்குடியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர் வடியாததால் பரிதவிக்கும் மக்கள்: வெளியேற்றக்கோரி தொடரும் மறியல் போராட்டங்கள்

தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் எம்ஜிஆர் பூங்கா பகுதியில் குளம்போல தேங்கி நிற்கும் தண்ணீர்.(வலது) தூத்துக்குடி ஜார்ஜ் சாலை சந்திப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரில் பாஜகவினர் வாழைக்கன்று நட்டு போராட்டம் நடத்தினர்.படங்கள்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நேற்று மழை ஓய்ந்திருந்த போதும், குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய வெள்ளம் வடியாததால் மக்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். மழைநீரை வெளியேற்றக் கோரி நேற்றும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்தது. இதனால் தூத்துக்குடி மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற வலியுறுத்தி நேற்று முன்தினம் 4 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் காலை முதல் நேற்று மாலை வரை தூத்துக்குடியில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இருப்பினும் நகரின் பெரும்பாலான பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்து மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. தூத்துக்குடி சிதம்பரநகர், பிரையன்ட் நகர், போல்டன்புரம், மாசிலாமணிபுரம், அண்ணாநகர், டூவிபுரம், லூர்தம்மாள்புரம், பூபால்ராயர்புரம், செயின்ட் மேரீஸ் காலனி, ஸ்டேட் பாங்க் காலனி, கேடிசி நகர், ஹவுசிங் போர்டு காலனி, செல்வநாயகபுரம், குறிஞ்சிநகர், முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்திநகர், தபால் தந்தி காலனி, ஆசிரியர் காலனி, கதிர்வேல் நகர், ராஜீவ் நகர், கால்டுவெல் காலனி, வெற்றிவேல்புரம், சாமுவேல்புரம், சின்னக்கண்ணுபுரம், பாத்திமாநகர், முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருமளவில் தேங்கி நிற்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் காமராஜ் கல்லூரி அருகே மற்றும் சிவந்தாகுளம் பகுதிகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோல் பாளையங்கோட்டை சாலையில் எம்ஜிஆர் பூங்காவை ஒட்டிய பகுதிகளில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது.

மாநகராட்சி சார்பில் 144 ராட்சத மோட்டார்கள், 15 டேங்கர் லாரிகள், 8 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் தலைமையிலான அதிகாரிகள் இப்பணிகளை கண்காணித்து துரிதப்படுத்தி வருகின்றனர்.

பாஜக நூதன போராட்டம்

மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி நேற்றும் பல்வேறு இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டனர். மழை நீரை விரைவாக அகற்றக் கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க மாவட்ட நிர்வாகம், எம்எல்ஏ மற்றும் எம்பி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாஜகவினர் தூத்துக்குடி ஜார்ஜ் சாலை சந்திப்பு பகுதியில் சாலையில் தேங்கிய நீரில் வாழைக்கன்று நட்டு நூதனப் போராட்டம் நடத்தினர்.

அக்கட்சியின் இளைஞரணி சார்பில் நடைபெற்ற இப்போராட்டத் துக்கு பாஜக மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பி.எம்.பால்ராஜ் , நிர்வாகிகள் ராஜவேல், விஎஸ்ஆர். பிரபு, விக்னேஷ் குமார், விவேகம் ரமேஷ், பொன்.குமரன் உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர்.

மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி ஸ்டேட் பாங்க் காலனி, முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், ஹவுசிங் போர்டு காலனி பகுதி மக்கள் நேற்று தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். தகவல் அறிந்த மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் அங்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் உறுதி யளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். இதுபோல் பிரையன்ட் நகர் 12-வது தெரு பகுதி மக்கள் நேற்று 2-வது நாளாக மீண்டும் மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி எம்எல்ஏ பெ.கீதாஜீவன் பல்வேறு பகுதி களுக்கு சென்று மழைநீரை வெளியே ற்றும் பணிகளை முடுக்கிவிட்டார். தூத்துக்குடியில் ஸ்டேட் பாங்க் காலனி உள்ளிட்ட மழைநீர் தேங்கிய பகுதிகளை இயக்குநர் கவுதமன் பார்வையிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x