Published : 14 Jan 2021 03:20 AM
Last Updated : 14 Jan 2021 03:20 AM

நிரவி, புரெவி புயலைவிட தொடர் மழையால் அதிக பாதிப்பு டெல்டாவில் 5 லட்சம் ஏக்கரில் சம்பா பயிர்கள் சேதம்: அரசு ஆய்வு செய்து கூடுதல் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே குலமங்கலம் பகுதியில் அறுவடைக்கு தயாரான சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதைக் காட்டும் விவசாயிகள்.

தஞ்சாவூர்/ திருவாரூர்

டெல்டா மாவட்டங்களில் நிரவி, புரெவி புயலால் பாதிக்கப்பட்டதைவிட அதிகளவாக, தற்போது பெய்துவரும் தொடர் மழையால் சுமார் 5 லட்சம் ஏக்கரில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு 10.23 லட்சம் ஏக்கரில் ஒரு போக சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிவர், புரெவி புயல்களால் சம்பா சாகுபடி வயல்களில் தண்ணீர் தேங்கி பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், எந்த ஆண்டும் இல்லாத வகையில், நிகழாண்டு ஜனவரி மாதத்தில் தொடர் மழை பெய்துவருவதால், சுமார் 5 லட்சம் ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதா விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சுந்தரவிமல்நாதன் கூறியபோது, “நிவர், புரெவி புயலைவிட டெல்டாவில் தற்போது பெய்த தொடர் மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறுவையில் அதிக மகசூல் கிடைத்ததாக மகிழ்ந்திருந்த நிலையில் தற்போது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏக்கருக்கு ரூ.32,500 வரை செலவு செய்தும் அறுவடை செய்ய முடியவில்லை. ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் கொள்முதலும் நடைபெறவில்லை. எனவே, டெல்டா மாவட்டங்களை முதல்வர் நேரடியாக பார்வையிட்டு, தேசிய பேரிடர் நிதியிலிருந்து உரிய நிவாரணத்தை பெற்றுத் தர வேண்டும்” என்றார்.

திருவாரூர் விவசாயி மூர்த்தி கூறியபோது, “திருவாரூர் மாவட்டத்தில் நிகழாண்டில் 3.60 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது பெய்துவரும் மழையால், 1.30 லட்சம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. வயல்களில் தேங்கியுள்ள நீர் வடிந்தாலும், இந்தப் பயிர்களை முழுமையாகக் காப்பாற்ற முடியாது. எனவே, அரசு மீண்டும் ஆய்வு செய்து கூடுதல் நிவாரணம் தர வேண்டும்” என்றார்.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஏ.ஜஸ்டினிடம் கேட்டபோது, “பாதிப்புகளை வருவாய்த் துறையினருடன் இணைந்து கணக்கெடுத்து வருகிறோம். இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x