Published : 14 Jan 2021 03:20 AM
Last Updated : 14 Jan 2021 03:20 AM
பருவ நிலை மாற்றத்தால் நெற்பயிரைத் தாக்கும் நோய்களில் இருந்து, பயிரை பாதுகாப்பது தொடர்பாக, வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
பருவ நிலை மாற்றத்தால் நெற்பயிரை பல்வேறு விதமான பூச்சி நோய் மற்றும் நூற்புழுக்கள் தாக்கி மிகுந்த சேதத்தை ஏற்படுத்துகின்றன. குலை, இலைப்புள்ளி நோய், நெல்மணி அழுகல் நோய், கரிப்பூட்டை நோய் கதிர் மற்றும் உறை அழுகல் நோய் என ஐந்து விதமான நோய்த் தாக்குதலால் நெற்பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. நெற்பயிர்களை பாதுகாப்பது குறித்து தமிழ்நாடு வேளாண்மைபல்கலைக்கழகத்தின் பொங்கலூர்வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் என். ஆனந்தராஜா மற்றும் பயிர் பாதுகாப்புத் துறை அலுவலர் பி. ஜி. கவிதா ஆகியோர் கூறியதாவது:
நெல்லைத் தாக்கும் மஞ்சள் கரிப்பூட்டை நோயில், ஒவ்வொரு தானியமும் மஞ்சள் நிறமாக மாறும். நெல்லின் மேல் கரும்பச்சை நிற உருண்டைகள் காணப்படும். மழை மற்றும் அதிக ஈரப்பதம், அதிக தழைச் சத்து கொண்டமண், அதிக காற்றின் காரணமாக ஒரு பயிரில் இருந்து மற்றொரு பயிருக்கு பூசண வித்துகள் எளிதில் பரவும். நெற்பயிரின் பூபூக்கும் பருவத்தில் அதிக தாக்குதல் ஏற்படும். நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட ரகங்களை பயன்படுத்த வேண்டும். சன்ன ரகங்களை விடுத்து குண்டு ரகங்களை பயன்படுத்த வேண்டும். நெற்பயிர்கள் ஈரமாக இருக்கும்போது வயலில் உழவியல் செயல்களைத் தவிர்க்கவேண்டும். மிகுதியான தழைச்சத்து உரம் அளிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டசிம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
குலை நோயை தடுக்கலாம்
குலை நோயால் பாதிக்கப்பட்ட பயிர்கள் ஆரஞ்சு நிறத்திலும் பின்னர் மஞ்சள் நிற துரு நிற புள்ளிகள் இலை முழுவதும் பரவும். பாதிக்கப்பட்ட பயிர்களில் பூப்பது தாமதமாகி, மணிகள் சிறுத்துகாணப்படுகின்றன. கதிர்கள் வெளிவராமலும் மணிகள் பால் பிடிக்காமலும் பாதிப்படைகின்றன. இதனை கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் கரைசல் அல்லது 10 லிட்டர் தண்ணீரில் 15 மில்லி என்ற அளவில் அசோக்சிஸ்ட்ரோபின் மருந்தை 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும். நெற்பயிரில் பூச்சித் தாக்குதல் தொடர்பாக விவசாயிகளுக்கு சந்தேகம் இருந்தால், பொங்கலூர் வேளாண் மையத்தை 04255- 296644, 296155 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT