Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM
பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முட்டை விலை 90 காசுகள் சரிந்தது. இதனை ஈடு செய்யும் வகையில் பண்ணைகளில் முட்டை உற்பத்தியை குறைக்க கோழிப்பண்ணையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் வாத்துப்பண்ணை மற்றும் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் தாக்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலங்களில் நோய்தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், மற்ற மாநிலங்களில் நிலவும் நோய் தாக்கம் நாமக்கல் மண்டல முட்டை, கோழி வர்த்தகத்தை வெகுவாக பாதிக்கச் செய்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1,800 கோழிப்பண்ணைகளில் நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் 2 கோடி முட்டை கேரள மாநிலத்திற்கும், மீதமுள்ள முட்டை உள்ளூர் விற்பனை மற்றும் வட மாநிலம், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இந்நிலையில் பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக மற்ற மாநிலங்களுக்கு முட்டை அனுப்புவதில் சிக்கல் நிலவி வருகிறது.
கோழிப்பண்ணைகளில் 2 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தேக்கம் காரணமாக முட்டை விலை தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முட்டை விலை 90 காசுகள் சரிந்துள்ளது. தற்போது ஒரு முட்டை420 காசுகளாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த விலை மேலும் சரியவாய்ப்புள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே தேக்கத்தை தவிர்க்க முட்டை உற்பத்தியை குறைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் கோழிப்பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. முட்டைக்கோழி 20-வது வாரம் தொடங்கி100 வாரம் வரை முட்டையிடும். இதன்பின்னர் முட்டையிடும் திறன் குறைவதால் அவற்றை இறைச்சிக்காக பண்ணையாளர்கள் விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் முட்டை தேக்கமடைவதைத் தவிர்க்க முட்டையிடும் நிலையில் உள்ள கோழிகளை பண்ணைகளில் விடுவதைதவிர்த்து இறைச்சிக்காக விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். அதுபோல் 100-வது வாரத்துக்குப் பின்னர் இறைச்சிக்கு அனுப்பும் கோழிகளையும் முன் கூட்டியே இறைச்சிக்கு அனுப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் பண்ணைகளில் முட்டை உற்பத்தி கணிசமான அளவு குறையும், என கோழிப்பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தடுப்பு நடவடிக்கை
நாமக்கல் மண்டலத்தில் உள்ள பண்ணைகளில் வழக்கமாகவே நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும்.
தற்போது மற்ற மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பண்ணைகளில் உள்ள கோழிகளுக்கு மருந்துதெளித்தல், வனப் பறவைகள் பண்ணைகளுக்குள் புகாமல்இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகி ன்றன.
இதுபோல் வெளி மாநிலங்களில் இருந்து வரும் முட்டை லாரிகள் நேரடியாக பண்ணைகளுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அவை முற்றிலுமாக கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தி ஒரு நாளுக்குப் பின்னரே பண்ணைக்குள் அனுமதிக்கப்படுகிறது.
மேலும், பறவைக் காயச்சல் பீதி குறையும் வரை பண்ணைகளில் உற்பத்தியாகும் முட்டைகளை குளிர்பதனக் கிடங்குகளில் சேமித்து வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது, என கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT