Published : 08 Jan 2021 06:54 AM
Last Updated : 08 Jan 2021 06:54 AM
அரியலூர்/ பெரம்பலூர்/ கரூர்/ கும்பகோணம்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று முன்தினம் மாலை பெய்த பலத்த மழை காரணமாக பெருக்கெடுத்த வெள்ளத்தால் வாழ்க்கை - தர்மசமுத்திரம் கிராமங்களுக்கு இடையே உள்ள செங்கால் ஓடை தரைப் பாலம் மூழ்கியது. இதனால் அச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை பெய்தது. இதில், ஜெயங்கொண்டத்தில் 8.8 செ.மீ மழை பதிவானது.
இந்த மழையின் காரணமாக பெருக்கெடுத்த வெள்ளத்தால், தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும், இந்த வெள்ளத்தில் வாழ்க்கை - தர்மசமுத்திரம் கிராமங்களுக்கு இடையே உள்ள செங்கால் ஓடை தரைப்பாலம் மூழ்கியது.
இதனால், இந்த பாலத்தில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
மேலும், இப்பகுதியில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இந்த வீடுகளில் வசித்தோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். இவர்களை மாவட்ட ஆட்சியர் த.ரத்னா நேற்று பார்வையிட்டு, ஆறுதல் கூறினார்.
அப்போது, மழைநீரை உடனடியாக வடியவைக்க உரிய ஏற்பாடுகளை செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆண்டிமடம் வட்டாரத்தில் 750 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள், தலா 300 ஹெக்டேரில் பயிரிட்டிருந்த உளுந்து, கடலை பயிர்களும் மழைநீரால் சூழப்பட்டுள்ளன.
ஆண்டிமடம்-சிலம்பூர் செல்லும் சாலையில் சிலுவைச்சேரி அருகே ஏரிக்கரையில் உடைப்பு ஏற்பட்டுவெளியேறிய வெள்ளத்தால் இப்பகுதியில் சாலையின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டிருந்த பாலத்தின் அருகே மண்அரிப்பு ஏற்பட்டு சாலை இரண்டாக துண்டிக்கப்பட்டுள்ளது.
2 நாட்களாக பலத்த மழை
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
பச்சமலை பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, அரும்பாவூர் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியிருந்த நிலையில் ஏரிக்கு வரும் நீர் முழுவதுமாக வெளியேற்றப்படுவதால், அப்பகுதியில் உள்ள கால்வாய், ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி அண்ணா நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் நேற்று அதிகாலை வெள்ளம் புகுந்தது.
இதையடுத்து, பூலாம்பாடி பேரூராட்சி நிர்வாகத்தினர் குடியிருப்புப் பகுதிகளுக்கு மழைநீர் செல்லாத வகையில் மழைநீர் வரும் கால்வாய்களில் மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பு ஏற்படுத்தினர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களை அருகில் உள்ள தற்காலிக முகாமில் தங்க வைத்து உணவு வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): அகரம் சீகூர், தழுதாழை தலா 90, கிருஷ்ணாபுரம் 60, பெரம்பலூர் 23, லப்பைக்குடிகாடு 19, வேப்பந்தட்டை 18, எறையூர் 12, புதுவேட்டக்குடி11, வி.களத்தூர் 10, பாடாலூர் 2.
அரவக்குறிச்சியில் 65 மி.மீ மழை
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): அரவக்குறிச்சி 65, அணைப்பாளையம் 45.20, க.பரமத்தி 40, பாலவிடுதி 35, மைலம்பட்டி 12, கடவூர் 11, கரூர் 10.20, தோகைமலை 4, மாயனூர் 2.
100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை தொடங்கி இரவு வரை பலத்த மழை பெய்தது. கோவிந்தபுரம், திருவிடைமருதூர், சூரியனார்கோவில் ஆகிய பகுதிகளில் 100 ஏக்கர் வயல்களில் தண்ணீர் தேங்கி, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கீழே சாய்ந்து சேதமடைந்துள்ளன.
நேற்று காலை 7 மணி நிலவரப்படி, திருவிடைமருதூர் 84.20, அணைக்கரையில் 80.60, மஞ்சளாறு 66.60, கும்பகோணம் 49, மதுக்கூர் 30.4, பட்டுக்கோட்டை 21, வெட்டிக்காடு 16 என மழை அளவு பதிவாகியுள்ளது.
இதேபோல, காரைக்கால் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு வரை விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது. நேற்று வெயில் அடித்தது. சில சமயம் வானம் மேகமூட்டமாகக் காணப்பட்டது. காரைக்காலில் நேற்று காலை 8.30 மணியுடன் 26.7 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT