Published : 06 Jan 2021 02:06 PM
Last Updated : 06 Jan 2021 02:06 PM
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:
“வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி (Easterly Waves) காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய பகுதியில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஜன.07 மற்றும் ஜன.08 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜன.09 தமிழகம், புதுவை கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஜன.10 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பதிவாகியுள்ளது.
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு ) 21 செ.மீ., அண்ணா யூனிவர்சிட்டி (சென்னை), தாம்பரம் (செங்கல்பட்டு) தலா 16 செ.மீ., எம்ஜிஆர் நகர் (சென்னை) 15 செ.மீ., சோழிங்கநல்லூர் (சென்னை), DGP அலுவலகம் (சென்னை) தலா 14 செ.மீ., செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்), பூவிருந்தவல்லி (திருவள்ளூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), தரமணி Arg (சென்னை), சென்னை விமான நிலையம் (சென்னை) தலா 13 செ.மீ.
பெரம்பூர் (சென்னை) 12 செ.மீ., ஆலந்தூர் (சென்னை), அம்பத்தூர் (திருவள்ளூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்) தலா 11 செ.மீ., பூவிருந்தவல்லி Arg ( திருவள்ளூர்), அண்ணா யூனிவர்சிட்டி Arg (சென்னை) தலா 10 செ.மீ., கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை) தலா 9 செ.மீ.
திருவள்ளூர், ஹிந்துஸ்தான் யூனிவர்சிட்டி (செங்கல்பட்டு) தலா 8 செ.மீ., திருப்போரூர் (செங்கல்பட்டு), தாமரைப்பக்கம் (திருவள்ளூர்), சோழவரம் (திருவள்ளூர்) தலா 7 செ.மீ., திருவாலங்காடு (திருவள்ளூர்), வைப்பர் (தூத்துக்குடி), பொன்னேரி (திருவள்ளூர்) தலா 6 செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
ஜனவரி 06 மற்றும் 07 தேதிகளில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியக் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT