Published : 05 Jan 2021 08:22 AM
Last Updated : 05 Jan 2021 08:22 AM

மகளிருக்கான பல நல்ல திட்டங்கள் வந்தது திமுக ஆட்சியில் தான்: கடலூர் அருகே நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சுநல்ல திட்டங்கள்

கடலூர் அருகே பாதிரிக்குப்பம் ஊராட்சியில் திமுக சார்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அருகில் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.

கடலூர்

கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாதிரிக்குப்பம் ஊராட்சி யில் நேற்று கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. நிகழ்வுக்கு கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமானஎம்ஆர்கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இந்த ஆட்சியில் கிராம சபை கூட்டமே நடத்தப்படவில்லை. நாங்கள் அதை நடத்தி நல்ல பெயர் வாங்கி விடுவோம் என்று, இந்த அரசு தடை விதித்து. அதனால் தான் நாங்கள் பெயரை மாற்றி மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தி வருகிறோம். இக்கூட்டம் நடைபெறும் அனைத்து இடங்களிலும் மக்களின் எழுச்சியை பார்க்கிறேன்.பெண்கள் அதிக அளவில் கலந்து கொள்கிறார்கள்.

5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, வேலை வாய்ப்பில் 30 சதவீத இட ஒதுக்கீடு, உள்ளாட்சியில் 33 சதவீத இட ஒதுக்கீடு, கர்ப்பிணிகள், விதவைகள் உதவி திட்டம், திருமண உதவி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதற்காக மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டது.

கிராமசபை கூட்டத்தை உள்ளாட்சித்துறை தான் நடத்த வேண்டும். ஆனால் தற்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் வேலுமணி ஊழல் ஆட்சித்துறை அமைச்சராக உள்ளார். அவர் வேலுமணி இல்லை; ஊழல் மணி. ஊழல் செய்வதில் முதல்வரை தாண்டி விட்டார். இந்த ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும்.

முதல்வர் பழனிசாமி முதல் கடைசி அமைச்சர் வரை ‘ஊழல், கமிஷன், கரப்ஷன், கொள்ளை’ என இந்த ஆட்சியின் பட்டியல் நீள்கிறது.

2015ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதன் பின்னர் பழனிசாமி இருந்த போது 2 வது முறை உலக முதலீட்டாளர் மாநாடு நடந்தது. கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 1லட்சத்து 90 ஆயிரம் கோடி முதலீடு வந்ததாக கூறுகிறார்கள். ஆனால் வந்தது ரூ.16 ஆயிரத்து 188 கோடி. அதாவது, அவர்கள் குறிப்பிடுவதில் 9.4 சதவீதம் மட்டுமே வந்துள்ளது. தமிழகம் தொழில்துறையில் 19வது இடத்தில் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் இருந்த பெண்கள்,ஆண்கள் உள்ளிட்ட 10 பேரிடம்மைக் கொடுத்து பேச வைக்கப்பட்டது. அவர்கள் வடிகால் வசதி இல்லை, சாலை வசதி இல்லை, வேலை வாய்ப்பு இல்லை, வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு உதவி தொகை நிறுத்தப்பட்டுள்ளது என பல்வேறு பிரச்சினைகளை அடுக்கினர். திமுகவின் இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் சரவணன்,வி.ஆர்.அறக்கட்டளை நிர்வாகி விஜயசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x