Published : 31 Dec 2020 03:20 AM
Last Updated : 31 Dec 2020 03:20 AM

கட்சி நிகழ்ச்சிகளில் மீண்டும் பூங்கோதை

குலையநேரியில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் கனிமொழி எம்.பியுடன் பூங்கோதை எம்எல்ஏ கலந்துகொண்டார்.

தென்காசி

பூங்கோதை ஆலடி அருணா எம்எல்ஏ ஆலங்குளம் தொகுதியில் 3 முறை போட்டியிட்டு 2 முறை வெற்றி பெற்றார். இதில், கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். கருணாநிதிக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்தார்.

கடந்த நவம்பர் மாதம் கடையம் அருகே நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பூங்கோதை எம்எல்ஏவுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது, தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பூங்கோதை, நிர்வாகிகள் சிலரின் காலைத் தொட்டு வணங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மறுநாள் திடீரென திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். உட்கட்சி பூசல் காரணமாக அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வதந்தி பரவியது. பின்னர், உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்ததாக அவரே விளக்கம் அளித்தார். திமுக தலைவர் கருணாநிதி தன் மகளைப் போல் பாசத்துடன் என்னை நடத்தியதுபோல் மு.க.ஸ்டாலினும் என் மீது பாசத்துடன் உள்ளார் என்றும் கூறியிருந்தார்.

சில நாட்கள் ஓய்வில் இருந்த பூங்கோதை, மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்பினார். தனது தொகுதியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளில் வழக்கம்போல் பங்கேற்று வருகிறார்.

தென் மாவட்டங்களில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பூங்கோதை எம்எல்ஏவும் தவறாமல் பங்கேற்பது வழக்கம். கடந்த சில மாதங்களாக கனிமொழி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பூங்கோதை பங்கேற்காமல் இருந்தார்.

இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கனிமொழியுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பூங்கோதை பங்கேற்றார்.

ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட பூங்கோதை எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்ற விவாதம் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து பூங்கோதை எம்எல்ஏவிடம் கேட்டபோது, “ஆலங்குளம் தொகுதியில் நான் செல்லாத கிராமமே இல்லை. எல்லா கிராமங்களுக்கும் குறைந்தபட்சம் 3 அல்லது 5 முறையாவது சென்றிருக்கிறேன். எம்எல்ஏ நிதி மற்றும் எனது தந்தை பெயரிலான அறக்கட்டளை மூலம் எல்லா பகுதிகளுக்கும் திட்டப் பணிகள், உதவிகள் செய்து வருகிறேன். திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்றும், மு.க.ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும் என்றும் மக்கள் விரும்புகின்றனர். தமிழகம் முழுவதும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்றார்.

ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட உங்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டதற்கு, “இதை திமுக தலைமையிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். இதுகுறித்து திமுக தலைமை தான் முடிவு செய்யும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x