Published : 27 Dec 2020 03:15 AM
Last Updated : 27 Dec 2020 03:15 AM
பயணிகளின் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் சென்னையில் நாளை முதல் 500 மின்சார ரயில்களாக அதிகரித்து இயக்கப்பட உள்ளன. இருப்பினும், பொதுமக்களுக்கான நேரக் கட்டுப்பாடு தொடரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனா ஊரடங்கால் சென்னைமற்றும் புறநகர் பகுதிகளுக்கு வழக்கமான பயணிகள் மின்சார ரயில்கள் முழு அளவில் இயக்கப்படவில்லை. இருப்பினும், அன்றாட பணிகளுக்கு செல்லும் அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் பயணம் செய்ய வசதியாகசெங்கல்பட்டு, அரக்கோணம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில்இருந்து சென்னை கடற்கரை, சென்ட்ரலுக்கு தினமும் மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வேலை செய்யும் அலுவலகம் அல்லது நிறுவனத்தின் அங்கீகார கடிதம், அலுவலக அடையாள அட்டையை காண்பித்து டிக்கெட் வாங்கிக் கொண்டு சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது. மேலும், பெண் பயணிகள் பயணம் செய்ய எந்த நேரக் கட்டுப்பாடும் இல்லை.
இதற்கிடையே, 8 மாதங்களுக்கு பிறகு கடந்த 23-ம் தேதி முதல் பொதுமக்களும் மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பயணிகள் ஒருவழி பயணத்துக்கான டிக்கெட் மட்டுமேபெறமுடியும். ரிட்டர்ன் டிக்கெட் பெற முடியாது. குறிப்பாக, காலை 7 முதல் 9.30 மணி வரையும், மாலை 4.30 முதல் இரவு 7 மணி வரையும் தவிர்த்து மற்ற நேரங்களில் மட்டுமே பொதுமக்கள் பயணிக்க முடியும் என நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 28-ம் தேதி (நாளை) முதல் மின்சார ரயில்களின் சேவை 500 ஆக அதிகரித்து இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:
கரோனா ஊரடங்கு சூழலில் மக்களின் அத்தியாவசிய தேவையை கருத்தில்கொண்டு மின்சார ரயில்கள் அதிகரித்து இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருக்கும் மொத்த மின்சார ரயில்களின் சேவையில் தற்போது 80 சதவீத ரயில்கள் மீண்டும் இயக்கப்பட உள்ளன.
அதன்படி, வரும் 28-ம் தேதி முதல் தற்போதுள்ள 410 மின்சார ரயில்களின் சேவை, 500 ஆக அதிகரித்து இயக்கப்படும். அதே நேரத்தில் பொதுமக்களுக்கான நேரக் கட்டுப்பாடு தொடரும். முகக்கவசம் அணிவது போன்றகரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை பயணிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். ரயில்வே வாரியத்தின் ஒப்புதலை பெற்ற பிறகே அடுத்தகட்ட தளர்வுகளை அறிவிக்க முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT