Published : 20 Dec 2020 03:14 AM
Last Updated : 20 Dec 2020 03:14 AM

ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கியவர் முதல்வர் அரசு விழாவில் மாணவி நெகிழ்ச்சி

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள சேலம் மாவட்ட மாணவர்கள் 26 பேர் நேற்று முதல்வரை சந்தித்தனர். அப்போது, முதல்வருக்கு நன்றி தெரிவித்து மாணவி எம்.தீபிகா பேசினார்.

சேலம்

ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை முதல்வர் நனவாக்கியுள்ளார். அவருக்கு கோடானுகோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள அரசுப் பள்ளி மாணவி அரசு விழாவில் தெரிவித்தார்.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள சேலம் மாவட்ட மாணவர்கள் 26 பேர் எடப்பாடியை அடுத்த ஆலச்சம்பாளையத்தில் நேற்று நடந்த விழாவில் முதல்வரை சந்தித்தனர். அப்போது, முதல்வருக்கு நன்றி தெரிவித்த மாணவர்கள் நினைவு பரிசும் வழங்கினர். மேலும், விழாவில் மாணவி எம்.தீபிகா பேசியது:

எனது தந்தை முருகேசன், கூலி வேலை செய்பவர். அம்மா பெயர் சத்யா. நான் 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, அரசுப் பள்ளியில் படித்தேன். சேலம் மணக்காடு காமராஜர் நகரவை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து, 503 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன்.

எனக்கு, சிறு வயதில் இருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. அதனால், பிளஸ் 2 முடித்தவுடனே நீட் தேர்வுக்கு பயிற்சி பெற விரும்பினேன். அதிலும், முதல்வரால் ஏற்படுத்தப்பட்ட தொடுவானம் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று நீட் தேர்வு எழுதினேன்.

தேர்வில் எனக்கு குறைவான மதிப்பெண் கிடைத்ததால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்குமா? என்ற கவலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் தான் என்னைப் போன்ற ஏழை, எளிய, அரசுப் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகளின் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவை நனவாக்கும் வகையில் மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை முதல்வர் ஐயா கொண்டு வந்தார்.

இதன் மூலம் எனக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் படிப்புக்கு இடம் கிடைத்துள்ளது. அதேபோல, தனியார் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்த அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் கல்விக் கட்டணம் செலுத்துவதற்கு சிரமப்பட்ட வேளையில், தனியார் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், கல்வி செலவை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முதல்வர் அறிவித்தார்.

என்னைப்போல், ஏழை எளிய அரசுப் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் மருத்துவக் கனவை நனவாக்கி மாண்புமிகு தமிழக முதல்வருக்கு ஒட்டுமொத்த மாணவ, மாணவிகளின் சார்பாக கோடானுகோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x