Last Updated : 19 Dec, 2020 03:14 AM

1  

Published : 19 Dec 2020 03:14 AM
Last Updated : 19 Dec 2020 03:14 AM

நாமக்கல்லில் டிஜிட்டல் ஹவுஸ்: தானாக சுற்றும் மின் விசிறி, வீட்டு வேலை செய்யும் குட்டி ‘ரோபோ’- ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தில் சாதிக்கும் இளைஞர்

உலகின் எந்த ஒரு மூலையில் இருந்தாலும் தனது செல்போன் மூலம் 3டி பிரிண்டரை இயக்கும் வகையில் வடிவமைத்தது குறித்து நவீன்குமார் விளக்குகிறார்.

நாமக்கல்

அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாமக்கல்லைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர் தனது வீட்டை ‘டிஜிட்டல்ஹவுஸாக’ மாற்றி ஆச்சரியப் படுத்தியுள்ளார். வீட்டில் நுழைந் தவுடன் மின்சாதன பொருட்கள் தானாக வேலை செய்யத் தொடங்குவது காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.

நாமக்கல் முதலைப்பட்டி புதூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி நவீன்குமார். கணினி அறிவியல் படித்துள்ள நவீன்குமார், அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது வீட்டை ‘டிஜிட்டல் ஹவுஸாக’ மாற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். வீட்டுக்குள் நுழைந்தவுடன் மின் விசிறி (ஃபேன்) தானாக சுற்றுகிறது. விளக்குகள் தானாக எரிகின்றன. கணினி தானாக இயங்குகிறது. கால நேரத்துக்கு ஏற்ப ஃபேனின் வேகம், விளக்குகளின் வெளிச்சம் ஆகியவற்றின் அளவு மாறுகிறது.

குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை குட்டி ரோபோ வீட்டை கூட்டி, பெருக்குகிறது. பழைய திரைப்படங்களில் வரும் மாயாஜால காட்சிபோல் அவரது வீட்டில் நடைபெறும் நிகழ்வுகள் உள்ளன. ஆனால், மாயாஜாலம் இல்லாமல், சொந்த முயற்சியால் அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இவற்றையெல்லாம் நவீன்குமார் வடிவமைத்துள்ளார். இவற்றுக்குத் தேவையான மின்சாரத்தை சூரிய ஒளி மூலம் பெறும் வகையில் சோலார் பேனல்களை வடிவமைத்துள்ளார்.

அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீட்டை வடிவ மைத்தபோதும் இயற்கையை நேசிக்கும் வகையில் வீட்டின் முற் றத்தில் பறவையினங்களுக்கு தேவையான கூடுகளை வைத்துள்ளார். காலை, மாலை வேளையில் பறவைகளின் ரீங்காரம் அப்பகுதியில் ரம்யமான சூழலை ஏற்படுத்தி வருகிறது.

இதுதொடர்பாக நவீன்குமார் கூறியதாவது:

நான் வெப் டிசைனராக உள்ளேன். அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வீட்டில்ஆட்டோமேஷன் செய்திருக்கி றேன். இதற்காக ஒரு சாப்ட்வேரை பயன்படுத்தி வீட்டில் உள்ள மின்சாதனப் பொருட்கள் தானாக இயங்கும் வகையில் வடிவமைத்துள்ளேன். கதவை திறந்து உள்ளே நுழைந்தால் ஃபேன் தானாக சுற்றும். எனது செல்போன் மூலம்டிவி உள்ளிட்டவற்றை இயங்கும்படி செய்துள்ளேன்.

இவை ஏற்கெனவே உள்ளதுதான். அவற்றில் சில புதுமைகளை புகுத்தியுள்ளேன். அதேவேளையில் இணையம் இல்லையென்றாலும் இவை இயங்கும். இதுதான் இதன் சிறப்பு. இதற்காக நானோ டேட்டா சென்டரை வடிவமைத்துள்ளேன். இதுபோன்ற டேட்டா சென்டரை தயாரித்து விற்பனையும் செய்துள்ளேன்.

வீட்டிற்குத் தேவையான மின்சாரத்துக்கு சோலார் பேனல் பயன்படுத்தியுள்ளேன். இதற்கு தேவையான லித்தியம் பேட்டரி எனது சொந்த முயற்சியில் உருவாக்கப்பட்டது.

இந்த முறையிலான பேட்டரி இந்திய அளவில் இதுவே முதன்முறையாகும். அமெரிக்காவில் இதுபோன்ற பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு இதனை வடிவமைத்தேன். இந்த தொழில் நுட்பத்தால் பிற உயிரினங்கள் குறிப்பாக பறவையினங்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக வீட்டைச்சுற்றி ஃவைபை வசதி செய்ய வில்லை. எல்லாம் வயர் மூலம்தான் மேற்கொள்ளப்படுகிறது.

வீடு முழுவதும் பறவையினங்களுக்காக கூடு வைத்துள்ளேன். நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகள் வந்து செல்கின்றன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x