Published : 18 Dec 2020 12:58 PM
Last Updated : 18 Dec 2020 12:58 PM
லஞ்ச வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற மதுரை லஞ்ச ஒழிப்புக் காவல் ஆய்வாளர் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். மதுரை செல்லூர் கீழ வைத்தியநாதபுரம் நேரு தெருவில் வசித்தவர் பெருமாள்பாண்டியன்(50). இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் வடுகபட்டி. இவர் மதுரை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்தார். இவரது மனைவி உமா மீனாள்(47). இவர் மதுரை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு சுந்தர் சுகிர்தன்(22), பிரணவ் கவுதம்(14) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். முதல் மகன் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இரண்டாவது மகன் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அரசு மருத்துவர் ஒருவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகப் புகார் கூறப்பட்டது. இதில் இவருக்கு சாதகமாக செயல்பட நமச்சிவாயம் என்கிற இடைத்தரகர் மூலம் 2010-ல் ரூ.1.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாகப் பெருமாள்பாண்டியன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் டிச.14-ல் மதுரை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றம் பெருமாள்பாண்டியனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தது. நமச்சிவாயத்துக்கு 2 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் ஜாமீன் பெற்று மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் பெருமாள்பாண்டியனின் இரண்டாவது மகன் அவரது தாத்தா வீட்டுக்கு நேற்று சென்றிருந்தார். மூத்த மகன் சுந்தர் சுகிர்தன் காலை 10 மணிக்கு கணினி வகுப்புக்குச் சென்றுவிட்டு பிற்பகல் 1 மணிக்கு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. பெற்றோருக்கு மொபைல் போன் மூலம் அழைத்தும் எடுக்கவில்லை. இதையடுத்து கதவை உடைத்துப் பார்த்தபோது, தாய் உமா மீனாள் தலையில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தார். அதே அறையில் பெருமாள்பாண்டியன் தூக்கில் சடலமாகத் தொங்கியதைக் கண்டார். செல்லூர் காவல் ஆய்வாளர் கோட்டைசாமி நடத்திய முதல் கட்ட விசாரணையில், வீட்டில் கிடந்த சுத்தியல் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெருமாள்பாண்டியன் தனது மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. கடந்த 10 ஆண்டுகளாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், லஞ்ச வழக்கில் சிறை தண்டனை கிடைத்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி இந்த விபரீத முடிவு எடுத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது குறித்து செல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT