Published : 16 Dec 2020 03:15 AM
Last Updated : 16 Dec 2020 03:15 AM

ஈகோவை விட்டுக்கொடுத்து ரஜினியுடன் ஒத்துழைக்கத் தயார்: கோவில்பட்டியில் கமல்ஹாசன் உறுதி

கோவில்பட்டியில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில், கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

கோவில்பட்டி

‘மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் ஈகோவை விட்டுக் கொடுத்து ரஜினியுடன் ஒத்துழைக்கத் தயார்’’ என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மதுரையில் கடந்த 13-ம் தேதி பிரச்சாரத்தை தொடங்கிய கமல்ஹாசன் நேற்று கோவில்பட்டி வந்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

எம்.ஜி.ஆருக்கு நீட்சியாக எந்த நடிகர் வேண்டுமென்றாலும் இருக்கலாம். அவர் திமுகவில் இருந்தபோது அவரது பெயர் மக்கள் திலகம் தான். அதிமுக தொடங்கிய பின்னரும் அவரை அப்படியே தான் அழைத்தனர். இங்குள்ள 7.5 கோடி மக்களுக்கு அவர் சொந்தம். அதில் நானும் ஒருவன்.

நாங்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என எண்ணுபவர்கள். எங்களுக்கு எந்த அச்சமும் கிடையாது. அதனால் தான் தேடிச் சென்று பார்க்கிறோம். மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள் பதவிக்கு வருவதில் அர்த்தமில்லை. தேர்ந்தெடுப்பதில் நமக்கு தான் புத்தி கூர்மை இருக்க வேண்டும்.

அரசியலுக்கு நான் ஏன் வந்தேன் என்பதற்கான காரணத்தை சொல்லிவிட்டேன். கண்டிப்பாக ஒரு மாற்றம் வேண்டும். ரஜினியும் அதனை சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர்களது கொள்கை என்ன என்பதை இன்னும் தெளிவாகச் சொல்லவில்லை. அவர் ஒற்றை வார்த்தையில் சொல்வதை நாம் முழு கொள்கையாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் சொன்ன பிறகு நாங்கள் பேசுவோம்.

நட்பு என்பது எங்களுக்கு எளிதான ஒன்று. நாங்கள் இருவருமே ஒரு போன் போட்டால் கிடைக்கக் கூடியவர்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்ய முடிந்தால் உதவி செய்வோம். மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் எந்த ஈகோவையும் விட்டுக் கொடுத்து விட்டு ஒத்துழைப்போம் என ஏற்கெனவே கூறியுள்ளேன் என்றார்.

முன்னதாக, தொழில் முனைவோர்களுடன் கமல்ஹாசன் கலந்துரையாடினார். அவர் பேசியதாவது: எங்கள் கட்சி வேட்பாளருடன், நீங்கள் ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள். அதனை புரோநோட்டில் எழுதிக்கொள்ளுங்கள். நான் சாட்சி கையெழுத்திடுகிறேன். அதில், இந்த பிரச்சினைகளை இந்த காலகட்டத்துக்குள் அவர் செய்யத் தவறினால் ராஜினாமா கடிதத்துடன் அந்த ஒப்பந்தத்தை என்னிடம் வழங்குவார்.

வாக்களிக்க பணம் வாங்க வேண்டாம் என நண்பர்களிடம் கூறுங்கள். அப்படியே வாங்குவது என்றால், அரசிடமிருந்து வாங்குவதாக இருந்தால் ரூ.5 லட்சம் கேளுங்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x