Published : 16 Dec 2020 03:16 AM
Last Updated : 16 Dec 2020 03:16 AM
வேலூர் மாவட்டத்தில் பாலாற்றின் கரையோரத்தில் அழிக்கப்பட்ட காட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கணினி பட்டதாரி இளைஞரின் பணி பலராலும் பாராட்டுப் பெற்றுள்ளது.
முன்னொரு காலத்தில் நெல், வாழை, கரும்பு, தென்னை என விவசாயம் செழித்த பூமியாக வேலூர் மாவட்டம் இருக்க பாலாறு முக்கிய காரணமாக இருந்தது. ஆண்டு தோறும் ஓடும் வெள்ளத்தால் பசுமை படர்ந்த விவசாயம் இன்று நிலத்தடி நீரை நம்பும் நிலைக்கு சென்றுவிட்டது. மாறிவரும் பருவநிலை, காடுகள் அழிப்பு, பாலாற்றில் சுரண்டப்பட்ட மணல் போன்ற காரணங்களால் மாவட்டத்தின் அடையாளம் கிட்டத்திட்ட அழிக்கப்பட்டது என்றே கூறலாம். இதில், பாலாற்றின் கரையோரத்தில் அழிக்கப்பட்ட காடு ஒன்றை கதையாக கூறலாம்.
குடியாத்தம் வட்டத்துக்கு உட்பட்ட உள்ளி கிராம பாலாற்றின் கரையோரத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் இருந்த காட்டில் கூடு கட்டி வாழ்ந்த பறவைகள், முயல், மான், காட்டுப்பன்றிகள் சுதந்திரமாக சுற்றித்திரிந்தன. கடந்த30 ஆண்டுகளில் படிப்படியாக காடு அழிக்கப்பட்டு ஆக்கிரமிப்பாளர் களின் பிடியில் சிக்கி மணல் சுரண் டும் இடமாக மாறியது. ஆக்கிரமிப் பாளர்களால் அழிக்கப்பட்ட காட்டை மீட்கும் முயற்சியில் கணினி பட்டதாரி இளைஞர் காந்த் (31) வெற்றிகரமாக தொடங்கியுள்ளார்.
உள்ளி கிராமத்துக்கு அருகேயுள்ள வாத்தியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர், சென்னையில் சினிமா நிறுவனம் ஒன்றில் உதவி இயக்குநராக பணியாற்றியவர், திடீரென தனது கிராமத்துக்கு திரும்பி தந்தைக்கு உதவியாக இருந்து காட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் குறித்து கூறும்போது, ‘‘விவசாய குடும்பப் பின்னணியில் வளர்ந்த எனக்கு சினிமா ஆசையில் சென்னையில் தங்கி உதவி இயக்குநராக பணியாற்றி வந்தேன். தந்தைக்கு உதவியாக இருந்த சகோதரர் தர், கடந்த 2017-ம் ஆண்டு அவர் சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்தோம். குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் சோகத்தால் சினிமா கனவை துறந்து தந்தைக்கு உதவியாக இருக்க வேண்டிய கட்டாயத்துடன் ஊர் திரும்பினேன். சகோதரரின் முதலாம் ஆண்டு நினைவாக, எங்கள் கிராம சாலை ஓரங்களில் 1,000 மரக்கன்றுகளை நட்டு பரா மரித்தேன். இதை மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் சண்முக சுந்தரம் பாராட்டினார். அவரது ஊக்கத்தால் பாலாற்றங்கரையில் அழிக்கப்பட்ட காட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டேன்’’ என்றார்.
மேலும், ஆக்கிரமிப்பாளர்கள், அரசியல் அழுத்தங்களை கடந்து குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர் உதவியுன் 25 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்ட நிலையில், அங்கு காடு வளர்க்கும் திட்டம் செயல் வடிவம் பெற்றது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க ரூ.13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 30 பேருக்கு பணி வழங்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 25 ஏக்கரில் காடு வளர்ப்பு திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை வேலூர் மாவட்ட ஆட்சி யர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத் தார். வேகமாக வளர்ந்து வரும் மரக்கன்றுகள் இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் காடாக மாறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘‘25 ஏக்கரில் நாவல், அரசன், புங்கன், ஆலம், வேம்பு, நீர் மருது, இலுப்பை, அத்தி என பாரம்பரிய மரக்கன்றுகளுடன் பூக்கள், பழ வகைகள் என சுமார் 6,400 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. காடு வளர்ந்துவிட்டால் அருகே உள்ள மலைப் பகுதியில் இருந்து முயல், காட்டுப்பன்றிகள், பறவைகள் மீண் டும் இங்கு திரும்பும். காடு வளர்ப்பு திட்டத்துக்காக தினசரி அரை நாள் இங்குள்ள தொழிலாளர்களுடன் செலவிடுகிறேன்’’ என்கிறார் காந்த்.
மாவட்ட நிர்வாகம் ஆதரவுடன் இழந்த காட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள காந்த்தின் பணி பலராலும் பாராட்டுப் பெற்றுள்ள நிலையில் இளைஞர்கள் உதவியுடன் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் காடு வளர்ப்பு திட்டத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT