Published : 13 Dec 2020 11:45 AM
Last Updated : 13 Dec 2020 11:45 AM
தேனி மாவட்டத்தின் முக்கிய தொழில்களில் ஒன்றான செங்கல்சூளைத் தொழில் தொடர்மழை காரணமாக வெகுவாய் பாதிக்கப்பட்டுள்ளது. சுடாத செங்கற்களை வெயிலில் காய வைக்க முடியாததால் பல சூளைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் செங்கல் ஒன்றின் விலை ரூ.7 ஆக உயர்ந்துள்ளது. தேனி மாவட்டத்தில் லட்சுமிபுரம், அரண் மனைப்புதூர், கருவேல்நாயக்கன்பட்டி, சீலையம்பட்டி, சின்னமனூர், போடி, ஓடைப் பட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலும் செங்கல் சூளைகள் அதிகளவில் செயல்படுகின்றன. பெரும்பாலும் பயன்பாட்டில் இல்லாத நிலங்களில் தரை வாடகை கொடுத்தே சூளைகள் அமைக்கப்பட்டுள்ளன. கனிமவளத் துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியம், வருவாய்த் துறை உள்ளிட்டவற்றின் அனுமதி பெற்று, சிறுதொழில்களாக ஆங்காங்கே திறந்த வெளியில் இவை செயல்பட்டு வருகின்றன.
கண்மாய், குளங்களில் உள்ள மண்ணே பெரும்பாலும் செங்கல் தயாரிப்பிற்கு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதில் சேர்ந்திருக்கும் சுக்காங்கல் போன்ற கழிவுகளை நீக்கி குழைவாக பதப்படுகிறது. மறுநாள் தேவைப்படும் அளவிற்கு தண்ணீர் தெளித்து கட்டலை எனும் செங்கல் அறுப்பு கட்டை மூலம் செங்கல் வடிவிற்கு இந்த மண் மாற்றப்படுகிறது. செங்கல் அளவிற்கு உரு கொடுக்கப்பட்ட இந்த மண் பின்பு சூளை களத்தில் நீண்ட வரிசையாக வைக்கப்படுகிறது. சூரிய வெப்பத்தைப் பொறுத்து ஒருவாரம் இவை காய வைக்கப்படும். அடுத்தடுத்த குழைவு செங்கல்கள் உலர்த்துவதற்காக இதன் மேல் அடுக்கி வைக்கப்படுகின்றன.
சுடாத இந்த செங்கற்களை லேசான சாரலின் போது பாதுகாக்க தார்பாலின் பயன் படுத்தி மூடி வைக்கிறார்கள். முன்பு செங்கல் சூளைக்கு அருகில் உள்ள குளம், கண்மாய்களில் வருவாய்த் துறை மூலம் மண் அள்ளி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக கடுமையான கட்டுப்பாடுகளால் இதற்கு தடை விதிக்கப்பட்டது. எனவே கனிமவளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தெப்பம்பட்டி, தென்பழநி உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே மண் வாங்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு லோடு மண் ரூ.7 ஆயிரத்திற்கு கிடைக்கிறது. இதில் சுமார் 4 ஆயிரம் செங்கல்கள் செய்ய முடியும். வெயிலில் காய வைக்கப்பட்ட செங்கல்களை பின்பு சூளையில் விறகு மூலம் வெப்பப்படுத்தி அதன் தன்மை உறுதிப்படுத்தப்படும். தொடர்ந்து 4 நாட்கள் ஒரே வெப்ப நிலையில் இருக்கும். அடுத்த ஒருவாரம் வரை சூளையில் சூடு நீடிக்கும். இதனால் செங்கற்கள் சுட்ட செங்கற்களாக மாறி வலுப்பெற்று விடுகிறது. பின்பு சூளைகள் பிரிக்கப்பட்டு செங்கற்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக இத்தொழில் பல்வேறு தடுமாற்றங்களை சந்தித்து வருகிறது. மூலப்பொருளான ஒரு யூனிட் மண் ரூ.4 ஆயிரத்தில் இருந்து படிப்படியாக தற்போது ரூ.7 ஆயிரமாக அதிகரித்து விட்டது. இதனால் செங்கல் விலையும் 4 ரூபாயில் இருந்து ரூ.6 வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பருவமழை, காற்றில் தொடர் ஈரத்தன்மை, கரோனா, புயல் மழை, கட்டுமானப் பணிகளில் தேக்கம் போன்றவற்றினால் செங்கல் தயாரிப்புகள் வெகுவாய் குறைந்து வருகின்றன. குறிப்பாக தொடர் மழையினால் தற்போது இத்தொழில் வெகுவாய் முடங்கி கிடக்கிறது. குழைக்கப்பட்ட செங்கல்களை காய வைக்க முடியாமலும், காய வைக்கப்படும் செங்கல்கள் மழையில் கரைந்து விடுவதாலும் பல சூளைகளில் தயாரிப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வேலைவாய்ப்பு குறைந்ததுடன், தொழில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து லட்சுமி புரம் செங்கல் சூளை உரிமையாளர் கனகராஜ் கூறுகையில், சூளைக்கு பயன்படுத்தப்படும் சீமைக்கருவேலமரம் மதுரை பகுதியில் இருந்து டன் ரூ.5 ஆயி ரத்திற்கு வாங்குகிறோம். இதனுடன் பெரியகுளம் பகுதியில் இருந்து மா விறகுகளும் பயன்படுத்தப்படுகிறது. வைக்கோல் ரூ.2 ஆயிரத்திற்கு வாங்க வேண்டும். இதுதவிர வேலையாட்கள் கூலி உள்ளிட்ட செலவினங்கள் இருக்கின்றன.
இதனால் ஒரு செங்கலின் தயாரிப்பு செலவே ரூ.5 ஆகிவிடுகிறது. பல்வேறு பிரச்னைகளால் சமீப காலமாக பல சூளைகள் மூடப்பட்டு விட்டன. வேறு தொழில் தெரியாததால் நாங்கள் இதையே செய்து கொண்டிருக்கிறோம். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் சுடாத செங்கற்களை காய வைக்க முடியவில்லை. இதனால் உற் பத்தியை நிறுத்தி வைத்துள்ளோம். தற்போது செங்கல் விலை ரூ.7 ஆக உயர்ந்து விட்டது என்றார்.
இதனால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது. மழை முற்றிலும் குறைந்து காற்றில் வெப்பநிலை அதிகரித்தால் தான் மீண்டும் செங்கல் சூளைகள் இயங்கும். இதனால் செங்கல் விலை மேலும் அதிகரித்து கட்டுமான செலவினங்களும் அதி கரிக்கக்கூடும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT