Published : 11 Dec 2020 05:14 PM
Last Updated : 11 Dec 2020 05:14 PM
தேனியில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிலைய கட்டுமானப் பணிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொடர் முயற்சியால் தேனி அரசு மருத்துவக்கல்லூரி, பெரியகுளத்தில் அரசு செவிலியர் கல்லூரி, போடியில் அரசு பொறியியல் கல்லூரி, தேக்கம்பட்டியில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, வீரபாண்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தற்போது வீரபாண்டி அருகே தப்புக்குண்டு கிராமத்தில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிலையம் அமைய உள்ளது.
253.64 ஏக்கரில் ரூ.265கோடி மதிப்பில் அமையும் இக்கல்லூரியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் நேற்று அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து இன்று கட்டுமானப்பணி தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிக்க, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
நிர்வாகக் கட்டடம், நவீன வகுப்பறைகளுடன் கூடிய எட்டு கல்வித்தொகுதித் திட்டங்கள், தனித்தனி விடுதிகள், உணவகம், முதல்வர், விடுதிக் காப்பாளருக்கான குடியிருப்பு, விருந்தினர் இல்லம். நவீன ஆய்வகத்துடன் கூடிய பால், இறைச்சிகளைப் பதப்படுத்தும் தொழில்நுட்ப நிலையங்கள் உட்பட 15துறைகள், கால்நடை பண்ணை வளாகம் உள்ளிட்டவை இதில் அமைய உள்ளன.
கட்டுமானப் பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை அலுவலர்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.
ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்டிகே.ஜக்கையன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சி.பாலசந்திரன் பதிவாளர் பா.டென்சிங்ஞானராஜ் சார்ஆட்சியர் சினேகா, சென்னை முதன்மைத் தலைமை பொறியாளர் (கட்டடங்கள்) ராஜ்மோகன், தேனி கால்நடை மருத்துவக்கல்லூரி முதல்வர் அ.பழனிசாமி, தேனி ஆவின் தலைவர் ஓ.ராஜா, மாவட்ட ஊராட்சித்தலைவர் ப்ரிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT