Published : 10 Dec 2020 03:15 AM
Last Updated : 10 Dec 2020 03:15 AM
திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயிலுக்கு மன்னர் ஆட்சிக் காலத்தின்போது சுமார் 11 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டிருந்தது. அந்த நிலத்தில் சுமார் 8ஏக்கர் நிலத்தை, இந்து சமய அறநிலையத் துறையிடமிருந்து முறைப்படி காவல்துறை விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு நிலத்துக்கு காவல் துறை பாதுகாப்பும் போடப்பட்டதால், கோயில் நிலத்தை கோயிலுக்கே வழங்க வேண்டும் என 7 ஊர்களை சேர்ந்த மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கார்த்திகை மாத பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த 10 நாட்களாக கோயிலில் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து வழிபடும் நிகழ்வுக்கு இடம் இல்லாததால், இந்து அறநிலையத் துறை மற்றும் காவல் துறையை கண்டித்து 6 ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று விழா புறக்கணிப்பில் ஈடுபட்டனர். உள்ளூர் கிராம மக்கள் மட்டும் திருவிழாவை நடத்தி, சாலையோரத்தில் வரிசையாக பொங்கல் வைத்து, அம்மன் வழிபாடு நடத்தினர்.
இதுகுறித்து ஆண்டிபாளையம் பகுதி கிராம மக்கள் கூறும்போது, ‘‘கடந்த 200 ஆண்டுகளாக பரம்பரைபரம்பரையாக கோயிலில் வழிபாடுநடத்தி வருகிறோம். ஆண்டுதோறும் 7 ஊர் மக்கள் சேர்ந்து பொங்கல் வைப்போம்.
தற்போது கோயில் இடம் இல்லாததால் 6 ஊர் மக்கள் பொங்கல் வைக்க வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் சாலையோரத்தில் பொங்கல் வைத்து வேண்டுதலை நிறைவேற்றினோம். இந்து சமய அறநிலையத் துறையும், காவல் துறையும் கோயில் இடத்தை கோயிலுக்கே திரும்பத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT