Published : 09 Dec 2020 04:38 PM
Last Updated : 09 Dec 2020 04:38 PM
வேலூர் மாவட்டம் அரியூர் அருகே புழல் சிறை வார்டன் உட்பட 3 பேரை வெட்டிக்கொலை செய்த பிரபல ரவுடி உட்பட அவரது கூட்டாளிகள் 7 பேரைக் காவல் துறையினர் இன்று கைது செய்தனர். ஒரே நாள் இரவில் 3 பேர் அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்துக் காவல் துறையினர் இன்று (டிச.9) கூறியதாவது:
வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார் (27). இவர் கடந்த ஏப்ரல் மாதம் அரியூர் பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான காமேஷ் (25) என்பவரைச் சந்திக்கச் செல்லும்போது அங்குள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அரியூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான எம்எல்ஏ ராஜா (39) என்பவருடன் தகராறு ஏற்பட்டது. இதில் ரவுடி எம்எல்ஏ ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் ஒன்றுசேர்ந்து அசோக்குமாரை வெட்டிக் கொலை செய்தனர்.
இந்தக் கொலை வழக்கில் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகளை அரியூர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரவுடி ராஜா மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததால் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்ததும், ரவுடி ராஜாவைக் கொலை செய்ய அசோக்குமாரின் நெருங்கிய நண்பரான அரியூரைச் சேர்ந்த காமேஷ் (27) என்பவர் திட்டம் வகுத்து வந்தார். இந்தத் திட்டத்துக்கு காமேஷின் நெருங்கிய நண்பர்களான அரியூர் பகுதியைச் சேர்ந்த சென்னை புழல் சிறையில் வார்டனாகப் பணியாற்றி வந்த தணிகைவேலு (26), மற்றும் அரியூர் அடுத்த முருக்கேரி கிராமத்தைச் சேர்ந்த வேலூர் தனியார் மருத்துவமனை ஊழியரான திவாகர் (26) ஆகியோர் உதவியாக இருந்தனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 11-ம் தேதி ராஜா சிறையில் இருந்து விடுதலையானார். இதையறிந்த காமேஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து ராஜாவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினார்.
இதையறிந்த ராஜா தன் கூட்டாளிகளுடன் ஒன்றுசேர்ந்து காமேஷ் மற்றும் அவரது நண்பர்களைக் கொலை செய்ய முடிவு செய்தார். இதற்கிடையே அணைக்கட்டு அடுத்த புலிமேடு பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் புழல் சிறை வார்டன் தணிகைவேலுவும், தனியார் மருத்துவமனை ஊழியர் திவாகரும் மது அருந்திக்கொண்டிருக்கும் தகவல் ராஜாவுக்குத் தெரியவந்தது.
உடனே, டாடா சுமோ காரில் ராஜா, அவரது கூட்டாளிகள் 7 பேருடன் அங்கு சென்றார். ராஜாவைக் கண்டதும், தணிகைவேலு, திவாகர் ஆகியோர் தப்பிக்க முயன்றனர். அவர்களைச் சுற்றி வளைத்த ரவுடி கும்பல் 2 பேரையும் அரிவாளால் சரிமாரியாக வெட்டினர். இதில், 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து, தணிகைவேலுவின் செல்போன் மூலம் காமேஷுக்கு ராஜா தகவல் கொடுத்தார். நண்பர்கள் கொலை செய்யப்பட்ட தகவலைக் கேட்டதும், அதிர்ச்சியடைந்த காமேஷ் தன் மற்றொரு நண்பரான அரியூரைச் சேர்ந்த பிரவீன்குமார் (28) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் புலிமேடு தென்னந்தோப்பு பகுதிக்கு விரைந்து வந்தார். அப்போது எதிரே வந்த ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் காமேஷை வழிமறித்து அவரையும், உடன் வந்த பிரவீன்குமாரையும் வெட்டிச் சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் வேலூர் எஸ்.பி. செல்வகுமார், வேலூர் கூடுதல் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், பாகாயம் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது, உயிருக்குப் போராடிய காமேஷ் மற்றும் பிரவீன்குமாரை மீட்ட காவல் துறையினர் 2 பேரையும் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே காமேஷ் உயிரிழந்தார். பிரவீன்குமார் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, கொலையாளிகளைப் பிடிக்க மாவட்ட எல்லைகளில் காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பாகாயம் பகுதியில் காவல் ஆய்வாளர் சுதா வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக டாடா சுமோவில் வந்த ரவுடி ராஜா மற்றும் அவரது கூட்டாளிகளான அரியூரைச் சேர்ந்த சேம்பர் ராஜா (34), சின்ன சேக்கனூர் பகுதியைச் சேர்ந்த சுனில் (35), அரியூரைச் சேர்ந்த ரோஹித்குமார் (31), திருவலம் அடுத்த கண்டிப்பேடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (25), ஊசூரைச் சேர்ந்த லோகேஷ் (27), சிறுகாஞ்சி பகுதியைச் சேர்ந்த உமா மகேஷ்வரன் (27) ஆகிய 7 பேரைக் கைது செய்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் கொலை செய்யப்பட்ட இடத்தில் வீசப்பட்ட 7 அரிவாள்கள், டாடா சுமோ ஆகியவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக ஒரே நாள் இரவில் நண்பர்கள் 3 பேர் அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT