Published : 08 Dec 2020 03:13 AM
Last Updated : 08 Dec 2020 03:13 AM

ரயில் மீது கல் வீசியதாக பாமகவினர் 5 பேர் கைது

சென்னை

போராட்டத்தின்போது ரயில் மீது கல் வீசி தாக்கியதாக பாமகவைச் சேர்ந்த 5 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

வன்னியர்களுக்கு 20 சதவீதஇடஒதுக்கீடு வழங்க கோரி பாமக சார்பில் கடந்த 1-ம் தேதிசென்னையில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொள்ள சென்னைக்கு வந்த பாமகவினரை போலீஸார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர்.

பெருங்களத்தூர் அருகே தடுத்து நிறுத்தப்பட்ட பாமகவினர், அருகே இருந்த ரயில் பாதையில் நுழைந்து, ரயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பிகள், மின்சார பெட்டிகளை தூக்கி வைத்து மறியல் செய்தனர். ரயிலை தடுத்து நிறுத்தி, அதன் மீது கற்களை வீசி தாக்கினர்.

இதுதொடர்பாக பாமகவைச்சேர்ந்தவர்கள் மீது ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் காஞ்சிகோயிலை சேர்ந்த முத்துசாமி(45), முனுசாமி (30), பழனிசாமி(36), சித்தோட்டை சேர்ந்ததமிழ்செல்வன்(26), நந்தகுமார்(20) ஆகிய 5 பாமகவினரை ரயில்வே போலீஸார் ஈரோட்டில் கைது செய்தனர். இவர்களை சென்னைக்கு நேற்று அழைத்துவந்தனர். இவர்கள் மீது அனுமதிஇல்லாமல் ஒரே இடத்தில் கூடுதல், தண்டவாளத்தை கடப்பது, ரயில் மறியலில் ஈடுபடுதல், கற்களை வீசி தாக்குதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறும்போது, ‘‘ரயில் மறியல் மற்றும் கற்களை வீசியவர்களின் வீடியோக்களை வைத்து முதல்கட்டமாக 5 பேரை அடையாளம் கண்டுபிடித்து கைதுசெய்து இருக்கிறோம். இந்தசம்பவத்தில் 300 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களையும் பிடிக்கும் பணியில் தனிப்படை போலீஸார் ஈடுபட்டுள்ளனர்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x