Published : 07 Dec 2020 03:14 AM
Last Updated : 07 Dec 2020 03:14 AM
பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரையில் கொண்டுவரப்பட்ட ஐம்பொன் வேலை, திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் உண்டியலில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று காணிக்கையாக செலுத்தினார். யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் இன்று (டிச.7) திருச்செந்தூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,போலீஸார் அனுமதி மறுத்துள்ள தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரை கடந்த நவ.6-ம்தேதி திருத்தணியில் தொடங்கியது. இந்த யாத்திரை முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் வழியாக திருச்செந்தூரில் டிச.6-ம் தேதி நிறைவடையும் எனவும், டிச.7-ம் தேதி திருச்செந்தூரில் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று காலைதிருச்செந்தூர் வந்து செந்திலாண்டவர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக வெற்றிவேல் யாத்திரையில் கொண்டுவந்த வேலுடன், அவர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து கோயிலுக்கு நடந்தே வந்தார். கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு, தங்க கொடிமரம் அருகில் உள்ள உண்டியலில், தான் கொண்டுவந்த ஐம்பொன்னால் ஆன சுமார் 3 அடி உயர வேலை காணிக்கையாக செலுத்தினார்.
கந்த சஷ்டி கவசம் விவகாரம்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழ் கடவுள்முருகனை போற்றும் கந்தசஷ்டி கவசத்தை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் திரித்து வெளியிட்டனர். இதை யாரும் கேள்வி கேட்கவில்லை. 4 பேரை தமிழக அரசு கைது செய்தது. கைது செய்யப்பட்ட செந்தில்வாசன் என்பவர் திமுகவின் ஐடி பிரிவில் வேலை செய்ததாக கூறியுள்ளார். திமுகவும் அதை மறுக்கவில்லை. எனவே, இதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து தமிழ்மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக வேல் யாத்திரை தொடங்கப்பட்டது.
சுவாமிமலை, பழமுதிர்ச் சோலை, திருப்பரங்குன்றம் வழியாக திருச்செந்தூர் வந்து முருகப்பெருமானிடம் வேலை காணிக்கையாக செலுத்தி இருக்கிறேன். யாத்திரை நிறைவு நிகழ்ச்சி திருச்செந்தூரில் இன்று (டிச.7) நடக்கிறது. மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்துகொள் கிறார் என்றார்.
பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளர்கள் கரு.நாகராஜன், நரேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளி உடனிருந்தனர்.
அனுமதி இல்லை
வேல் யாத்திரை நிறைவு விழாவை திருச்செந்தூர்- திருநெல்வேலி சாலையில் கிருஷ்ணாநகர் எதிர்புறம் உள்ள திறந்தவெளி பகுதியில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஊரடங்கு அமலில் உள்ளதால் இந்நிகழ்ச்சிக்கு போலீஸார் அனுமதியளிக்கவில்லை.
தமிழகம் முழுவதும் இருந்து வரும் பாஜகவினருக்காக நகரில் உள்ள 30-க்கும் அதிகமான மண்டபங்கள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால் யாரையும் தங்க அனுமதிக்க கூடாதுஎன, போலீஸார் மண்டப உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி யுள்ளனர். மேலும் திருச்செந்தூர் நகருக்குள் பாஜகவினர் வருவதை தடுக்க போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மாவட்ட எல்லைகளில் தடுப்பு வேலிகளை அமைத்து போலீஸார் கண்காணிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT