Published : 05 Dec 2020 03:16 AM
Last Updated : 05 Dec 2020 03:16 AM

முதல்வர் வருகையின் போது போலீஸார் சரியாக திட்டமிடாததால் மதுரையில் ஸ்தம்பித்த ஒட்டுமொத்த போக்குவரத்து

கோப்புப்படம்

மதுரை;

மதுரைக்கு வந்த முதல்வருக்கு வரவேற்பு அளிப்பதாகக்கூறி முக்கியச் சாலைகளை அதிமுக வினர் ஸ்தம்பிக்க வைத்தனர்.

முல்லைப் பெரியாறு குடிநீர்த் திட்டத்தை தொடங்கி வைக்க முதல்வர் கே.பழனிசாமி நேற்று முன்தினம் இரவு மதுரை வந்தார். சொக்கிகுளம் தனியார் விருந்தினர் இல்லத்தில் அவர் தங்கினார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில் பங்கேற்க நேற்று காலை 9 மணிக்கு புறப்பட்டார். அவர் அங்கிருந்து புறப்பட்டு கோரிப்பாளையம், அரசு மருத்துவமனை வழியாக ஆட்சியர் அலுவலகம் வந்தார். வழிநெடுகிலும் 14 இடங்களில் அதிமுகவினர் மேள தாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். இதனால் விழா நடந்த இடத்துக்கு வர 9.50 மணியானது. அவர் தங்கியிருந்த இடத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகம் 3 கி.மீ. தூரம் தான். முதல்வருக்காக தல்லாகுளம், கோரிப்பாளையம், அரசு மருத்துவமனை, அண்ணா பஸ்நிலையம், காந்தி மியூசியம் சாலை உட்பட அனைத்து சாலைகளிலும் போலீஸார் வாகனப் போக்குவரத்தை நிறுத் தினர்.

விழா நடந்த இடத்துக்கு முதல்வர் 10 முதல் 15 நிமிடத்தில் வந்திருக்கலாம். ஆனால் அவர் வர 50 நிமிடங்கள் ஆனது. மேலும் போக்குவரத்தை நிறுத்தியதால் அரசு, தனியார் அலுவலகங்கள், அரசு மருத்துவமனைக்கு செல்லும் மக்கள் குறித்த நேரத்தில் போக முடியாமல் தவித்தனர். போலீஸார் திடீரென பாதைகளை மாற்றியதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் திண்டாடி னர். அரசு மருத்துவர்கள், செவிலியர், மருத்துவ மாண வர்கள், மற்ற பணியாளர்கள் காலை நேரங்களில் தான் வாகனங்களில் வருவர்.

அதனால் இயல்பாகவே காலை நேரங்களில் பனகல் சாலை பரபரப்பாக இருக்கும். ஆனால், முதல்வர் அந்த வழியாக வந்ததால் அரசு மருத்துவமனைக்கு செல்பவர்களைக்கூட போலீஸார் அனுமதிக்கவில்லை.

நேற்று முதல்வருக்கு வழிநெ டுகிலும் பிரம்மாண்ட அலங்கார வளைவுகள், தோரணங்கள் வைத்து கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர். மேலும் முதல்வரின் வாகனத்தைத் தொடர்ந்து அதிமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் முக்கியச் சாலைகளில் வருவதும், செல்வதுமாக இருந்ததால் நேற்று காலை சுமார் 3 மணி நேரம் சாலைகளில் மக்கள் செல்ல முடியாமல் பரிதவித்தனர்.

மாநகர் போக்குவரத்து போலீஸாரின் திட்டமிடாத போக்குவரத்து மாற்றத்தால் பொதுமக்கள் தவித்தனர்.

வரும் காலங்களில் இதுபோல நடக்காமல் இருக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x