Published : 05 Dec 2020 03:17 AM
Last Updated : 05 Dec 2020 03:17 AM
புரெவி புயல் தாக்கத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மிதமான மழை பெய்தது. இதனால் தூத்துக்குடி மாநகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
வங்கக்கடலில் உருவான புரெவி புயல் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் அனைத்து துறைகளும் உஷார்படுத்தப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு கனமழை பெய்யவில்லை. பலத்த காற்றும் வீசவில்லை.
இருப்பினும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் நேற்றும் 6-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
மாவட்டத்தில் உள்ள 423 விசைப்படகுகளும், 4,300 நாட்டுப்படகுகளும் கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தன. மேலும், புரெவி புயல் வலுவிழந்ததை தொடர்ந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஏற்றப்பட்ட 6-ம் எண் எச்சரிக்கை கூண்டு நேற்று 3-ம் எண்ணாக குறைக்கப்பட்டது.
புயல் தாக்கத்தால் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் லேசான தூரல் மழை பெய்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்தது. 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை நீடித்தது. அதன் பிறகு நேற்று பகலில் மழை பெய்யவில்லை.
அதிகாலை பெய்த மழையால்தூத்துக்குடி நகரில் உள்ள தாழ்வான பகுதிகளான பிரையண்ட்நகர், தபால் தந்தி காலனி, லூர்தம்மாள்புரம், பூபாலராயர்புரம், பழைய மாநகராட்சி அலுவலகப் பகுதி, ஜார்ஜ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம் போல் மழைநீர் தேங்கியது. இதனால் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.
மாநகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து 120 ராட்சத மோட்டார்கள் மற்றும் 8 டேங்கர் லாரிகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் தலைமையிலான அதிகாரிகள் அதி காலை 5 மணி முதல் நேரடியாகச் சென்று மழைநீரை வெளியேற்றும் பணிகளை முடுக்கிவிட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரியான அரசு முதன்மைச் செயலர் குமார் ஜெயந்த் மாநகராட்சியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டார். தூத்துக்குடி தபால் தந்தி காலனி, பிரையன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர், மழைநீரை வெளியேற்றும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு வரும் மழை வெள்ள வடிநீர் கால்வாய் பணிகள்,கோரம்பள்ளம் பொதுப்பணித்துறை கண்மாய் போன்றவற்றையும் ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜித் சிங் கலோன், மாநகராட்சி தலைமை பொறியாளர் சேர்மக்கனி, வட்டாட்சியர் ஜஸ்டின் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்):
திருச்செந்தூர் 24, காயல்பட்டினம் 30, விளாத்திகுளம் 12, வைப்பார் 33, சூரன்குடி 31, கோவில்பட்டி 3.5, கயத்தாறு 1,கடம்பூர் 4, ஓட்டப்பிடாரம் 5, மணியாச்சி 5, வேடநத்தம் 12, கீழஅரசடி 9, எட்டயபுரம் 9, ஸ்ரீவைகுண்டம் 1, தூத்துக்குடி 29.6 மி.மீ..
மாவட்டம் முழுவதும் நேற்று இரவு 7 மணி முதல் மிதமான மழை பெய்தது.
378 மானாவாரி குளங்கள் நிரம்பவில்லை
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தில் உள்ளகுளங்கள் மட்டுமே முழுமையாக நிரம்பியுள்ளன. பொதுப்பணித்துறை தாமிரபரணி வடிநில கோட்டத்தில் மொத்தம் 53 குளங்கள் உள்ளன. அணைகளில் நீர் திறக்கப்பட்டதன் காரணமாக இவை அனைத்தும் முழுமையாக நிரம்பியுள்ளன.
பொதுப்பணித்துறை கோரம்பள்ளம் வடிநில கோட்டத்தில் மொத்தம் 54 குளங்கள் உள்ளன. இவற்றில் நேற்றைய நிலவரப்படி 11 குளங்கள் மட்டுமே முழுமையாக நிரம்பியுள்ளன. 14 குளங்களில் 75 சதவீதத்துக்கு மேலும், 16 குளங்களில் 50 முதல் 75 சதவீதமும், 11 குளங்களில் 25 முதல் 50 சதவீதமும் தண்ணீர் உள்ளது. 2 குளங்களில் மட்டும் 25 சதவீதத்துக்கு குறைவாக தண்ணீர் உள்ளது. மாவட்டத்தில் 403 ஊராட்சிகளில் மொத்தம் 407 மானாவாரி குளங்கள் உள்ளன.
இதில் நேற்றைய நிலவரப்படி 29 குளங்கள் மட்டுமே 100 சதவீதம் நிரம்பியுள்ளன. 76 குளங்களில் 75 முதல் 99 சதவீதமும், 121 குளங்களில் 50 முதல் 75 சதவீதமும், 106 குளங்களில் 25 முதல் 50 சதவீதமும் தண்ணீர் உள்ளது. 75 குளங்களில் 25 சதவீதத்துக்கும் குறைவாக தண்ணீர் உள்ளது. புரெவி புயலால் அனைத்து குளங்களும் நிரம்பிவிடும் எனஎதிர்பார்த்த நிலையில் நிரம்பாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடந்த 2 நாட்களாக பெரிய அளவில் மழை பெய்யாததால் குளங்களுக்கு நீர் வரத்துஇல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT