Published : 04 Dec 2020 06:34 PM
Last Updated : 04 Dec 2020 06:34 PM
கள்ளக்குறிச்சியில் கோமுகி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தைப் பார்வையிடச் சென்ற 3 சிறுவர்களில் ஒருவர் உயிரிழந்தார். மாயமான மற்றொருவரைத் தேடும் பணி நடைபெறுகிறது. மேலும் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
கடந்த 3 தினங்களாகப் பெய்துவரும் கனமழையால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அந்த வகையில் கோமுகி அணையிலிருந்து விநாடிக்கு 1,100 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுவதால், கோமுகி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வாய்க்கால்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் தடுப்பணையில் வரும் வெள்ளப்பெருக்கைக் காணச் சென்ற கருணாபுரத்தைச் சேர்ந்த குமார் மகன் ராஜ்குமார் (16), தேவேந்திரன் மகன் வரதராஜன் (15) மற்றும் ராமு மகன் அஸ்வந்த் (15) ஆகிய 3 சிறுவர்கள் தடுப்பணை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில், வரதராஜன் மாற்றுத்திறனாளி ஆவார்.
அப்போது அருகிலிருந்தவர்கள் ராஜ்குமாரை மீட்டுள்ளனர். மேலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வரதராஜன் மற்றும் அஸ்வந்த் குறித்து கள்ளக்குறிச்சி தீயணைப்புப் படையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று வரதராஜனை மீட்டபோது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. மேலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அஸ்வந்தைத் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT