Published : 04 Dec 2020 03:15 AM
Last Updated : 04 Dec 2020 03:15 AM
ராமேசுவரம்/ தூத்துக்குடி/ நாகர்கோவில்
புரெவி புயல் இலங்கையை கடக்கத் தொடங்கியதும் ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் விடிய பெய்த பெய்த மழையால் குடியிருப்புப் பகுதிகளை மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. 5 மாவட்டங்களில் 1.92 லட்சம் பேரை தங்கவைக்கும் வகையில் 490 நிவாரண மையங்கள் தயாராக உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
நவ.28-ம் தேதி வங்கக்கடலில் உருவான புதியக் காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்றது. இந்தப் புயலுக்கு ‘புரெவி’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தப் புயல் இலங்கையைக் கடந்த நிலையில் நேற்று தமிழக கடலோரப் பகுதியான மன்னார் வளைகுடா பகுதியை அடைந்தது.
முன்னதாக ‘புரெவி’ புயல் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை இலங்கையைக் கடந்து தமிழகக் கடற்பகுதியை நெருங்கத் தொடங்கியதும் ராமேசுவரம் அதன் சுற்றுப் பகுதிகளில் விடிய விடிய பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மழையின் வேகம் அதிகரித்தது. மேலும் தனுஷ்கோடி, ராமேசுவரம், பாம்பன் கடல்கள் சீற்றமாகக் காணப்பட்டன.
இதனால், ராமேசுவரத்தில் உள்ள மீனவர் குடியிருப்புகளான ராமகிருஷ்ணாபுரம், நடராஜபுரம், மாந்தோப்பு, அம்பேத்கர் நகர், இந்திரா நகர், தங்கச்சிமடம் விக்டோரியா நகர், சின்னப்பாலம் ஆகிய பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி நின்றது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் ராமேசுவரம் வட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஊழியர்கள், தங்கச்சிமடம், பாம்பன் ஊராட்சி அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
புயல் அறிவிப்பால் ராமேசுவரத்துக்கு வரும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததுடன் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ராமேசுவரம் ரயில் நிலையம் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது. மேலும் தனுஷ்கோடியிலிருந்து மீனவ மக்கள் வெளியேற்றப்பட்டதால் ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி, அரிச்சல்முனை செல்லும் தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடிக் காணப்பட்டது.
நவ.29-ம் தேதி அன்று பாம்பனில் இருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்களைக் கொண்ட ஒரு படகு இன்ஜின் பழுது காரணமாக கரை திரும்ப முடியவில்லை. இதனால், மணலி தீவு அருகே படகை நங்கூரமிட்டிருந்தனர். இந்த மீனவர்களை கடலோர காவல்படையினர் மீட்டு மண்டபம் கடற்கரைக்கு நேற்று மாலை அழைத்து வந்தனர்.
நேற்று மாலை நிலவரப்படி ராமேசுவரத்தில் அமைக்கப்பட்டிருந்த புயல் பாதுகாப்பு மையங்களில் 500-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
490 நிவாரண மையங்கள்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் செ.ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது: ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் 490 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 1.92 லட்சம் பேர் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் தாங்கள் இருக்கும் இடம் பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதில் ஒரு சதவீதம் சந்தேகம் ஏற்பட்டாலும்கூட அரசு ஏற்பாடு செய்துள்ள பல்நோக்கு பாதுகாப்பு மையங்களுக்கு உடனடியாக சென்றுவிட வேண்டும் என்றா.
கரை திரும்பிய படகுகள்
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர், தேங்காய்பட்டினம், வள்ளவிளையில் இருந்து சென்றிருந்த 161 விசைப்படகுகளில் 130-க்கும் மேற்பட்ட படகுகள் ஆழ்கடலில் இருந்து கரை திரும்பியுள்ளன. மீதமுள்ள படகுகளுக்கு புயல் குறித்த தகவல் கிடைக்காமல் இருந்தது. இவற்றில் 20 படகுகள் கேரளா மற்றும் லட்சத்தீவு, கர்நாடகா பகுதிகளில் மீன்பிடித்து வருவதாகவும், இவற்றை மீட்பதற்காக இந்திய கடற்படை மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் மீன்வளத்துறையினர் தெரிவித்தனர்.
இது தவிர 10-க்கும் மேற்பட்ட படகுகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் சேட்டிலைட் போன் மூலம் தொடர்பு கொண்டு அவற்றை மீட்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT