Published : 04 Dec 2020 03:17 AM
Last Updated : 04 Dec 2020 03:17 AM
திருப்பத்தூர் அருகே ஏரியில் குப்பைக்கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை பொதுமக்கள் நேற்று சிறைபிடித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், பாச்சல் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெய்பீம் நகர் பகுதியை யொட்டி பெரிய ஏரி உள்ளது. சமீபத்தில் பெய்த கனமழையால் தற்போது ஏரிக்கு நீர்வரத்து வந்துகொண்டிருக்கிறது. பெரிய ஏரி என்பதால் ஏரி முழுமையாக நிரம்பவில்லை.
இந்நிலையில், ஏரியின் ஒருபுறம் தண்ணீர் இல்லாத பகுதியில் பாச்சல் ஊராட்சியைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் தினசரி குப்பைக்கழிவுகளை கொண்டு வந்து ஏரியில் கொட்டிவிட்டு செல்வதாக பொதுமக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர். அதன்படி, பாச்சல் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் ஊராட்சிக்கு சொந்தமான வாகனத் தில் குப்பைக்கழிவுகளை ஏரிப் பகுதியில் கொட்ட நேற்று காலை கொண்டு வந்தனர்.
இதையறிந்த பொதுமக்கள் அந்த வாகனத்தை நேற்று காலை சிறைபிடித்தனர். "ஏரியில் குப்பைக் கழிவுகளை கொட்டக்கூடாது" என வாக்குவாதம் செய்தனர்.
இதை பொருட்படுத்தாத தூய்மைப்பணியாளர்கள் பொது மக்கள் எதிர்ப்பையும் மீறி ஏரியில் குப்பைக்கழிவுகளை கொட்டிவிட்டு சென்றனர்.
இதுகுறித்து ஜெய்பீம்நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘‘எங்கள் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பாச்சல் ஊராட்சிக்கு உட்பட்ட16 வார்டுகளில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஜெய்பீம் நகர் பெரிய ஏரியில் கொட்டப்படுகிறது. இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் அலுவ லகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தோம்.
அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் ஜெய்பீம் நகர் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு நடத்தி, ஏரிப்பகுதியில் குப்பைக்கழிவுகளை கொட்டக் கூடாது என ஊராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். ஆனால், ஆட்சியர் உத்தரவையும் மீறி தொடர்ந்து ஏரிப்பகுதியில் குப்பைக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. தற்போது, ஏரியில் தண்ணீர் நிரம்பி வருவதையும் பொருட்படுத்தாமல் தூய்மைப்பணியாளர்கள் குப்பைக் கழிவுகளை கொட்டி வருவது வேதனையளிக்கிறது. இதற்கு, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத் திடம் கேட்டபோது, "பாச்சல் ஊராட்சியில் குப்பைக்கழிவுகளை கொட்ட தனி இடம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், திடக் கழிவுமேலாண்மை திட்டத்தை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜெய்பீம் நகர் பகுதியில் உள்ள ஏரியில் குப்பைக்கழிவுகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT