Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM
வேளாண்மையை அழிக்கும் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வைப்போம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரி வித்துள்ளா்ர.
திமுக சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்பு பிரச்சாரப் பொதுக்கூட்டம் காணொலிக்காட்சி மூலம் 125 இடங்களில் நடந்தது. இக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பிரகாஷ், எம்எல்ஏக்கள் வேப்பனப்பள்ளி முருகன், ஓசூர் சத்யா ஆகியோர் பேசினர். இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பேசியதாவது:
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் நுழைவு வாயிலாகவும், எல்லை நகராகவும் அழைக்கப்பட்ட பகுதி கிருஷ்ணகிரி. தமிழகத்தின் தொல்லை ஆட்சிக்கு முடிவுகட்ட நாம் அனைவரும் இங்கே நின்று கொண்டு இருக்கிறோம். அதிமுக ஆட்சியிடம் இருந்து தமிழகத்தை மீட்போம். தற்போதைய அதிமுக ஆட்சியில் அனைத்துத்துறைகளிலும் தமிழகம் பின்தங்கி உள்ளது. குறிப்பாக விவசாயத்துறையில் 19-வது இடத்திலும், தொழில்துறையில் 14-வது இடத்திலும், ஆட்சி நிர்வாகத்தில் 12-வது இடத்திலும், தூய்மைப் பணியில் 12-வது இடத்திலும், சுகாதாரத்துறையில் 11-வது இடத்திலும், பொருளாதார வளர்ச்சியில் 8-வது இடத்திலும், கல்வியில் 8-வது இடத்திலும் என அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு பின்தங்கி உள்ளது.
ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தில் இருந்த போதே, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கான உள்கட்டமைப்பு வசதிகள், சிப்காட், தொழில்நுட்பப் பூங்கா, சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் நாளை(இன்று) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனைகள் நடத்தி விரைவில் நாம் போராட்ட களம் காண இருக்கிறோம். வேளாண்மையை அழிக்கும் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வைப்போம்.
3 வேளாண் சட்டங்களால் விவசாயம் சிதைந்து போகிறது. விவசாயிகளுக்கு எந்த லாபமும் இல்லை என விவசாயிகள் கூறுகின்றனர். இந்த சட்டங்கள் மூலம் பெரிய நிறுவனங்க ளுக்குதான் லாபம் கிடைக்கும் என விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
கருணாநிதி முதல்வராக இருந்த போது தான் விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப் பட்டன. தன்னை விவசாயி என கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர், காவிரி நீரை பெற்றுத் தரவில்லை, விவசாயிகளைப் பாதிக்க கூடிய திட்டங்களை தடுக்க முடியவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அறிவிப்போடு உள்ளன. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக திமுகவின் மூத்த உறுப்பினர்கள் 260 பேருக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT