Published : 02 Dec 2020 07:29 PM
Last Updated : 02 Dec 2020 07:29 PM
சிவகங்கைக்கு முதல்வர் பழனிசாமி வருவதையொட்டி டிச.4-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் டிச.11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டுகளில், அதிமுக 8 இடங்களிலும், திமுக கூட்டணியில் திமுக 5, காங்கிரஸ் 2, இந்திய ஜனநாயகக் கட்சி ஒரு இடத்திலும் வென்றன. இதனால் அதிமுக, திமுக கூட்டணி சம பலத்தில் உள்ளன.
இந்நிலையில் ஜன.11, ஜன.30, மார்ச் 4 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்ட மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தலை அதிமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து புறக்கணித்ததால் பெரும்பான்மை இல்லாமல் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டன.
தொடர்ந்து கரோனாவால் மேலும் 6 மாதங்களாகத் தேர்தல் தள்ளிப்போனது. இதையடுத்து திமுகவைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள் சிலர் தேர்தலை நடத்த வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். இதையடுத்து டிச.4-ம் தேதி சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்படும் எனத் தமிழகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக டிச.4-ம் தேதி காலை 11 மணிக்கு முதல்வர் பழனிசாமி சிவகங்கை வருகிறார். ஒரே நாளில் முதல்வர் வருகை, மாவட்ட ஊராட்சித் தேர்தல் ஆகியவற்றால் அதிகாரிகள் குழப்பத்தில் இருந்தனர்.
மேலும் தேர்தல் அன்று முதல்வர் ஆய்வு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக சார்பில் தமிழகத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல், தொடர்ந்து 4-வது முறையாக டிச.11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அனைத்து மாவட்டக் கவுன்சிலர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT