Published : 01 Dec 2020 03:15 AM
Last Updated : 01 Dec 2020 03:15 AM
முறைகேடு செய்யும் அரசு ஊழியர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே ஊழலை தடுக்க முடியும் என உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பளூரைச் சேர்ந்த ராஜா, தனக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு முதலில் விசாரணைக்கு வந்தபோது, ராஜா, அரசுப் பள்ளி ஆசிரியராகவும், அவர் மகன் அரசு மருத்துவராகவும் இருப்பதை மறைத்து இலவச வீட்டுமனைப் பட்டா வாங்கியதால் ரத்து செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ராஜா மற்றும் அவர் மகன் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் வழக்கை திரும்பப் பெற அனுமதி கேட்டு ராஜா உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள், வழக்கை திரும்பப் பெற அனுமதி வழங்க மறுத்து, மனுதாரர் அவர் குடும்பத்தில் 5 பேர் பெயரில் இலவச பட்டா வாங்கியுள்ளார். இதை நீதிமன்றம் கண்டுபிடித்ததும், வழக்கை திரும்பப் பெற மனு தாக்கல் செய்துள்ளார் என்றனர்.
மேலும், ஏழைகளுக்கு வழங்கப்படும் அரசின் சலுகையை மனுதாரர் குடும்பம் ஏமாற்றிப் பெற்றுள்ளது. இதுபோன்ற அரசு ஊழியர்களின் நடவடிக்கையால் தான் ஊழல் நடைபெறுகிறது. மனுதாரர் சொத்து தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும். விதிமுறைகளை மீறி அரசின் சலுகைகளைப் பெற்றஅரசு ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்க வேண்டும். குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அரசு ஊழியராக இருப்பதை மறைத்து இலவச பட்டா பெற்ற மனுதாரர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு வழக்கறிஞர், மனுதாரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றார்.
அரசு ஊழியர் சங்கம் எதற்கு?
இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் மீது காவல் நிலையத்தில் ஏன் புகார் அளிக்கவில்லை?. இது போன்ற அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதைக் கண்டித்து அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டத்தில் குதிக்கின்றன. அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கங்கள்?. பெரும்பாலான சங்கங்கள் அதிகார அடிப்படையிலும், சாதி, மதம் அடிப்படையிலும் தான் செயல்படுகின்றன.
மக்கள் வரிப் பணத்தை ஊதியமாகப் பெறும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் முதலில் தங்கள் பணியை முறையாகச் செய்ய வேண்டும். பொதுமக்கள் நலனுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும், அது அரசியல்வாதிகளாக இருந்தாலும், அமைப்புகளின் தலைவர்களாக இருந்தாலும், அரசு ஊழியர்களாக இருந்தாலும் அவர்கள் சமூகத்துக்கு எதிரானவர்கள் தான்.
முறைகேட்டில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும். விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியாகும் சூழலில் அவர்கள் ஏற்கெனவே, வைத்திருக்கும் சொத்துக்கள் உட்பட மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இது போன்ற குற்றங்கள் தடுக்கப்படும். பணம் இருந்தால் எதையும் வாங்கலாம், எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணம் என்றனர்.
பின்னர் ராஜா, இவருக்குப் பட்டா வழங்கிய வட்டாட்சியர் ஆகியோரது சொத்து, வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றையும், ராஜா மீது வழக்குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை நகலையும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை டிச.7-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT