Published : 27 Nov 2020 07:22 AM
Last Updated : 27 Nov 2020 07:22 AM
‘நிவர்’ புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. அதிக பட்சமாக ஆம்பூரில் 107 மி.மீ., மழையளவு பதிவானது. தொடர் மழையால் 3 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை, பப்பாளி உள்ளிட்ட பயிர் வகைகள் சேதமடைந்தன. 15-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மாவட்டம் முழுவதும் மீட்புப்பணிகளில் 4,410 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.
‘நிவர்’ புயல் காரணமாக தமிழகத்தில் வடமாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, நிவர் புயல் நேற்று முன்தினம் இரவு கரையை கடந்தது. அப்போது, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் நள்ளிரவில் கனமழை பெய்ய தொடங்கியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. புயல் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் சார்பில், 16 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்போர், சாலை யோரங்களில் வசிப்போர், தாழ்வானப் பகுதிகளில் வசிப்போர் என 750 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை அரசு அதிகாரிகள் செய்து கொடுத்தனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த சிவராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுரேஷ் (35) என்பவ ரது வீடு நேற்று காலை இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த, திருப்பத்தூர் வட்டாட்சியர் மோகன் தலைமையிலான வருவாய்த் துறையினர் அங்கு சென்று சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தார் 8 பேரை மீட்டு நிவாரண முகாமில் தங்க வைத்தனர்.
அதேபோல, திருப்பத்தூர் அடுத்த குனிச்சி செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மணி (52) என்பவர் தனது 2 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த 4,300 பப்பாளி மரங்களில் சுமார் 2 ஆயிரம் மரங்கள் கனமழையால் முறிந்து விழுந்தன. வாணியம்பாடி வட்டம் உதயேந்திரம் பேரூராட்சி மாதாகோயில் தெருவைச் சேர்ந்த வினோத் (30) என்பவரது வீடும் நேற்று இடிந்து விழுந்தது.
திருப்பத்தூர் ஜார்ஜ்பேட்டை பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கவுதம்பேட்டை மற்றும் மாதனூர் பகுதியில் 3 மின் கம்பங்கள் சாய்ந்ததால் அங்கு மின்தடை ஏற்பட்டது. கனமழையால் ஏலகிரி மலைக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில், தொடர் மழையால் ஏலகிரி மலையில் 5 பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. இது குறித்து தகவலறிந்த நெடுஞ் சாலைத்துறையினர் அங்கு சென்று பாறைகளை அகற்றினர். மழையின் தாக்கம் குறையும் வரை பொதுமக்கள் ஏலகிரி மலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. திருப்பத்தூர் அடுத்த குரும்பேரி ஏரி, மடவாளம் பகுதியில் உள்ள பெரிய ஏரி, புலிக்குட்டை ஏரி, ராவுதம்பட்டியில் உள்ள வால்ஏரி ஆகியவை நேற்று நிரம்பின. மற்ற ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதாகவும், ஆண்டியப்பனூர் நீர்தேக்கம் 90 சதவீதம் நிரம்பியுள்ளதாகவும் நேற்று பிற்பகல் 2 மணி நிலவரப் படி அணையின் நீர்மட்டம் 88.16 மில்லியன் கன அடியாகஉள்ளதாகவும், தொடர்ந்து 2 நாட் களுக்கு தொடர் மழை பெய்தால் அணை முழுமையாக நிரம்பும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதே போல, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி யில் மழைநீர் நேற்று ஆர்ப்பரித் துக்கொட்டியது.
‘நிவர்’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க மாவட்டம் முழுவ தும் 4,410 பேர் மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்ட ஆட்சி யர் சிவன் அருள் ஆம்பூர், வாணியம்பாடி, மாதனூர் உள் ளிட்ட பகுதிகளில் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங் களை பார்வையிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார். நிவாரண முகாம்களில் ஆய்வு மேற்கொண்டு கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.
திருப்பத்தூர் அடுத்த புதுப் பேட்டை சாலையில் உள்ள மேம் பாலத்தின் கீழ் மழைநீர் சூழ்ந்ததால் சி.கே.ஆசிரமம், சிவசக்திநகர், அவ்வைநகர், மருத்துவர் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, நகராட்சி ஊழியர்கள் அங்கு சென்று ராட்சத மின்மோட்டார்களை கொண்டு மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல், ஜோலார்பேட்டை அடுத்த பக்ரிதக்கா ரயில்வே மேம் பாலத்தின் கீழும் மழைநீர் பெருக் கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். தகவலறிந்த, சார் ஆட்சியர் வந்தனாகர்க் மீட்பு குழுவினருடன் சென்று அங்கு தேங்கியுள்ள மழைநீரை மின்மோட்டார் கொண்டு வெளியேற்ற உத்தரவிட்டார்.
ஆம்பூரையொட்டியுள்ள வனப் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்ததால் அங்குள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளன. ஆணை மடுகு தடுப்பணை நிரம்பி உபரிநீர்வெளியேறியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நிவர் புயல் காரண மாக பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மழையளவு விவரம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் நிலவரப்படி பதி வான மழையளவு விவரம்: ஆம்பூர் 107 மி.மீ., ஆம்பூர் வடபுதுப்பட்டு 69, ஆலங்காயம் 85.8, நாட்றாம் பள்ளி 25, திருப்பத்தூர் 24.6, கேத்தாண்டப்பட்டி 24, வாணியம்பாடி 44 மி.மீ., என மொத்தம் 380 மி.மீ, மழையளவு பதிவாகியிருந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT