Published : 23 Nov 2020 05:35 PM
Last Updated : 23 Nov 2020 05:35 PM
திருச்சியில் காந்தி மார்க்கெட்டை மீண்டும் திறக்க வலியுறுத்தி நாளை (நவ.24) மாலை 6 மணி முதல் காலவரையற்ற காய்கனி விற்பனை நிறுத்தம் மற்றும் கடையடைப்புப் போராட்டம் நடத்த வியாபாரிகளில் ஒரு தரப்பினர் அறிவித்திருந்த நிலையில், மற்றொரு தரப்பினரோ காய்கனி விற்பனை வழக்கம்போல் நடைபெறும் என்று இன்று அறிவித்துள்ளனர்.
காந்தி மார்க்கெட் மொத்த வியாபாரிகளுக்காக மணிகண்டத்தை அடுத்த கள்ளிக்குடியில் மத்திய வணிக வளாகம் கட்டப்பட்டு, 2017ஆம் ஆண்டு செப்.5-ம் தேதி திறக்கப்பட்டது. ஆனால், அங்கு செல்ல காந்தி மார்க்கெட் வியாபாரிகள் மறுத்து வருகின்றனர். அதேவேளையில், உழவர் உற்பத்தியாளர் குழுவினர் சிலர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இதனிடையே, கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் திருச்சி காந்தி மார்க்கெட், கடந்த மார்ச் 30-ம் தேதி மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து, காய்கனி மொத்த விற்பனை தற்போது பொன்மலை ஜி கார்னர் ஹெலிபேட் தளத்தில் திறந்த வெளியில் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி மதுரம் மைதானம், தென்னூர் உழவர் சந்தை மைதானம் ஆகிய இடங்களில் சில்லறை விற்பனை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே காந்தி மார்க்கெட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வியாபாரிகளில் ஒரு தரப்பினர் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்தைத் திறக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சில மாதங்களுக்கு முன் திருச்சி மாவட்ட மனித வளர் சங்கம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது காந்தி மார்க்கெட்டைத் திறக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கின் விசாரணை நவ.26-ம் தேதியன்று மீண்டும் வரவுள்ளது.
இந்நிலையில், காந்தி மார்க்கெட்டைத் திறப்பதில் உள்ள இடைக்காலத் தடையை நீக்க வலியுறுத்தி, நவ.24-ம் தேதி மாலை 6 மணி முதல் காலவரையற்ற காய்கனி விற்பனை நிறுத்தம் மற்றும் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கத் தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளருமான வீ.கோவிந்தராஜூலு நேற்று அறிவித்தார். மேலும், வழக்கு விசாரணையின்போது சாதகமான தீர்வு கிடைக்காவிடில் நவ.27-ம் தேதி காந்தி மார்க்கெட் முன் குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது, அரசு வழங்கியுள்ள அடையாளச் சான்றுகளை மீண்டும் அரசிடமே ஒப்படைப்பது, சென்னையில் தமிழ்நாடு முதல்வரின் வீட்டை முற்றுகையிடுவது ஆகிய போராட்டங்களில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்துள்ளனர்.
ஆனால், இந்த அறிவிப்பை வியாபாரிகளில் ஒரு தரப்பினர் ஏற்க மறுத்து, வழக்கம்போல் காய்கனி விற்பனை நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். இது தொடர்பாக காந்தி மார்க்கெட் சில்லறை வியாபாரிகளில் ஒரு தரப்பினர் இன்று மதுரம் மைதானத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். க.ஜெய்சங்கர் என்பவர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், காய்கனி விற்பனை நிறுத்தம் மற்றும் கடையடைப்பில் ஈடுபடப்போவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜெய்சங்கர் கூறும்போது, "நாங்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. சில்லறை வியாபாரிகளில் 1,500 பேர் வரை உள்ளனர். எனவே, ஜி கார்னர், மதுரம் மைதானம், தென்னூர் உழவர் சந்தை மைதானம் ஆகிய இடங்களில் வழக்கம்போல் காய்கனி விற்பனை நடைபெறும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT