Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

கோவில்பட்டியில் பலத்த மழை; ஓடை அடைப்பால் சாலையில் பெருக்கெடுத்த தண்ணீர்; வாகன ஓட்டிகள் பாதிப்பு: ஓட்டப்பிடாரம் அருகே குளம் உடையும் அபாயம்

கோவில்பட்டி அருகே அத்தைகொண்டான் கண்மாய் நிரம்பியதையடுத்த மறுகால் பாய்ந்த தண்ணீர், ஓடையில் ஏற்பட்ட அடைப்பால் இளையரசனேந்தல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பெய்த பலத்த மழை காரணமாக கண்மாயில் இருந்து மறுகால் பாய்ந்த தண்ணீர் இளையரசனேந்தல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கோவில்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மழை கொட்டியது. இங்கு மட்டும் 25 மி.மீ. மழை பதிவானது.

தொடர்ந்து மழை காரணமாக கோவில்பட்டி அருகே அத்தைகொண்டான் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. ஆனால், ஓடையில் அடைப்பு இருந்ததால், தண்ணீர்மூப்பன்பட்டி கண்மாய்க்கு செல்லாமல், இளையரசனேந்தல் சாலையில் சுமார் ஒன்றரை அடி உயரத்துக்கு பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். தகவல் அறிந்து, வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். உடனடியாக 3 ஜேசிபி இயந்திரங்களை வரவழைத்து ஓடை அடைப்பை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்றது. ஓடையில் தண்ணீர் வரத்துக்கு தடையாக இருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டன.

ஓட்டப்பிடாரம் பகுதிகளைச் சுற்றிலும் நேற்று முன்தினம்இரவு முழுவதும் அடைமழை பெய்தது. விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளாரம்கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 250 ஏக்கர் பரப்புளவு கொண்ட குளத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் குளம் வேகமாக நிரம்பி வருகிறது.

இந்நிலையில், அதிகாலையில் குளத்தின் மதகு பகுதியில் உள்ள கரையில் திடீரென விரிசல் ஏற்பட்டு நீர்க்கசிவு உருவானது. நேரம் செல்லச் செல்ல விரிசல் பெரிதாகி வெளியேறும் தண்ணீரின் அளவும் அதிகரித்தது. குளம் உடைந்தால், வெள்ளாரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஜெகவீரபாண்டியபுரம், கீழச்செயித்தலை, மேலச்செயித்தலை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் நிலவுகிறது.

இதைப்பார்த்த கிராம மக்கள் உடனடியாக வெள்ளாரம் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து குளத்தின் கரையை பலப்படுத்தும் பணிகள் கிராம மக்கள் உதவிடன் மேற்கொள்ளப்பட்டன. கரையில் விரிசல் ஏற்பட்ட பகுதியில் ஜேசிபி மூலம் சரள் மண் கொண்டு தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடைபெற்றது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன் அங்கு வந்து சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். குளத்தின் உறுதி தன்மை,பாதுகாப்பு குறித்து பொதுப்பணித்துறையின் கோரம்பள்ளம் உதவிசெயற்பொறியாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

கரையை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். அவருடன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் காந்திஎன்ற காமாட்சி, வெள்ளாரம் ஊராட்சி முன்னாள் தலைவர் அழகுராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x