Published : 18 Nov 2020 09:38 PM
Last Updated : 18 Nov 2020 09:38 PM
சிவகங்கை மாவட்டத்தில் 4 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளது.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று சென்னையில் தொடங்கியது. இந்தாண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
நீட் தேர்வில் 448 மதிப்பெண்கள் பெற்ற எஸ்.புதூர் அருகே புழுதிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சி.சின்னநம்பிக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலும், 356 மதிப்பெண்கள் பெற்ற எஸ்.புதூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.யோகேந்திரனுக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இவர்களுக்கு சீர்மரபினர் (மிகவும் பிற்பட்டோர்) பிரிவில் இடம் கிடைத்துள்ளது.
இவர்கள் இருவரும் 2 -வது ஆண்டாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் அதேபோல் 255 மதிப்பெண்கள் பெற்ற காரைக்குடி அருகே அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர்.அமிர்தத்திற்கு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியிலும், 249 மதிப்பெண்கள் எடுத்த சிங்கம்புணரி ஆர்எம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர்.சுருதிக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.
இவர்கள் இருவரும் இந்தாண்டு ஒருமுறை மட்டும் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு பிற்பட்டோர் பிரிவில் இடம் கிடைத்துள்ளது. அம்மாணவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து பாராட்டு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT