Published : 16 Nov 2020 05:26 PM
Last Updated : 16 Nov 2020 05:26 PM
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் டிச.27-ம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்த இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம், புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தலைமையில் இன்று (நவ.16) நடைபெற்றது.
திருநள்ளாற்றில் சனி பகவானுக்குத் தனிச் சன்னதியுடன் கூடிய தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி வரும் டிச.27-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பிரவேசிக்கிறார். சனிப்பெயர்ச்சி விழாவின்போது நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறுக்கு வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், கரோனா பேரிடர்ச் சூழலில் சனிப்பெயர்ச்சி விழாவுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பான இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தலைமையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, துணை ஆட்சியரும், நிர்வாக அதிகாரியுமான (கோயில்கள்) எம்.ஆதர்ஷ், துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட் மற்றும் தொடர்புடைய துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கரோனா தொற்றுப் பரவல் உள்ள சூழலில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் எவ்வாறு சனிப்பெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது எனக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. என்னென்ன ஏற்பாடுகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் அமைச்சருக்கு விரிவாக எடுத்துக் கூறினர்.
நளன் குளத்தில் பக்தர்களை நீராட அனுமதிக்கலாமா, குளத்தில் எந்த அளவுக்கு நீர் நிரப்புவது, நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க எந்த மாதிரியான வழிமுறைகளைக் கையாள்வது, உடனுக்குடன் நீரை வெளியேற்றுவது என்பன குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அதிகாலை நேரத்தில் சனிப்பெயர்ச்சி நிகழ்வு நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், நடமாடும் கழிப்பறைகளைக் கூடுதலாக அமைக்க வேண்டும், முக்கியச் சாலைகளின் சீரமைப்புப் பணிகளை விழாவுக்கு முன்னதாகச் சீரமைத்துவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பலவேறு ஆலோசனைகளை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.
சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் தொடர்பாக அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT