Published : 13 Nov 2020 03:16 AM
Last Updated : 13 Nov 2020 03:16 AM
மேட்டூர் அருகே கிராம மக்கள் சிலருக்கு டெங்கு, எலிக் காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு சுகாதாரத் துறையினர் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேட்டூர் அடுத்த கொளத்தூர் பாலமலை மலைக்கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள 20 பேருக்கு ரத்தப் பரிசோதனை மூலம் கரோனா தொற்று தொடர்பாக பரிசோதனை செய்யப்பட்டது. இதில், யாருக்கும் கரோனா தொற்று இல்லை. ஆனால், 11 பேருக்கு டெங்கு அறிகுறியும், சிலருக்கு டெங்குடன், எலிக் காய்ச்சல், மலேரியா பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. குறிப்பாக, ஒருவருக்கு டெங்கு, எலிக்காய்ச்சல், மலேரியா ஆகிய பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இரு மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மலேரியா ஒழிப்புப் பணியாளர்கள் என 8 பேர் அடங்கிய குழுவினர் அங்கு முகாமிட்டு சுகாதாரம் மற்றும் சிகிச்சைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,"பாலமலை கிராமத்தில் கரோனா தொற்று பரிசோதனை ரேண்டம் முறையில் எடுக்கப்பட்டபோது, அங்கு சிலருக்கு டெங்கு, எலிக்காய்ச்சல், மலேரியா பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. எனினும், பாதிக்கப்பட்டவர்கள் யாருக்கும் காய்ச்சல் அறிகுறி இல்லை.
எனினும், அடுத்தக் கட்டப் பரிசோதனைக்குப் பின்னர், தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது, கிராமத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் முன்னெச்சரிக்கையாக மருந்துகள் வழங்கவும், கிராமத்தில் நீர் மாதிரி பரிசோதனை, கொசு ஒழிப்பு உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்றனர்.
இதனிடையே, பாலமலை கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்லும் கண்ணாமூச்சி கிராமத்தில் டெங்கு பரிசோதனை முகாம் நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த காரிப்பட்டியில் கரோனா தொற்று பரிசோதனை நடத்தியதில், ஒருவருக்கு டெங்கு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அங்கு டெங்கு தடுப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT