Last Updated : 12 Nov, 2020 08:22 PM

4  

Published : 12 Nov 2020 08:22 PM
Last Updated : 12 Nov 2020 08:22 PM

50 ஆண்டுகளுக்குப் பிறகு பழங்குடியின இருளர் குடியிருப்புக்கு மின்சார வசதி: சிதம்பரம் சார் ஆட்சியர்  நடவடிக்கை

தங்கள் குடியிருப்புக்கு மின்சார இணைப்பை ஏற்படுத்தி தந்த சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனுக்கு பழங்குடியின இருளர் மக்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

கடலூர்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.மானம்பாடி கிராமத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனின் நடவடிக்கையால் பழங்குடியின இருளர் குடியிருப்புக்கு மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிதம்பரம் அருகே சி.மானம்பாடி கிராமத்தில் வாய்க்கால் கரை ஓரமாக 26 குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடியின இருளர் இன மக்கள் ஓலைக் குடிசையில் குடியிருந்து வந்தனர். அங்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. ஒன்றையடிப் பாதையில்தான் நடந்து செல்ல வேண்டும். கல்வி அறிவு இல்லாமல் மீன்பிடித்தல், நத்தை பிடித்தல், நண்டு பிடித்தல் ஆகிய தொழில்களைச் செய்து வாழ்க்கையை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள் அவர்களுக்கு வேண்டிய உதவிகள் மற்றும் அரசு சலுகைகளைப் பெற்றுத் தந்தனர்.

கடந்த 3 மாதங்கள்க்கு முன்பு இப்பகுதி வந்த சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் 40-க்கும் மேற்பட்ட பழங்குடியின இருளர் குழந்தைகளைப் பள்ளிக்குப் படிக்க அனுப்பி வைத்தார். மேலும் அவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார். இவர்கள் வாழும் பகுதியில் சுமார் 50 ஆண்டு காலமாக மின்சார வசதி இல்லை என்பதை அறிந்த சார் ஆட்சியர், இது குறித்து சிதம்பரம் மின்துறை அதிகாரிகளிடம் பேசினார். இதையடுத்து அந்தப் பகுதிக்கு 8-க்கும் மேற்பட்ட புதிய மின் கம்பங்கள் குறுகிய காலத்தில் நடப்பட்டு அங்குள்ள குடியிருப்புகளுக்கு மின் இணைப்பும் வழங்கப்பட்டது.

சிதம்பரம் அருகே சி.மானம்பாடியில் பழங்குடியின இருளர் மக்கள் குடியிருப்பில் மின் சுவிட்சை சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் ஆன் செய்து மின் விளக்குகளை எரிய வைத்தார்.

இந்நிலையில் இன்று (நவ.12) பழங்குடியின இருளர் குடியிருப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் மதுபாலன் கலந்து கொண்டு வீடுகளுக்குக் கொடுக்கப்பட்ட மின் இணைப்பை சுவிட்சு போட்டு மின் விளக்குகளை எரிய வைத்துத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து குழந்தைகள், மாணவர்களுக்குக் கல்வி உபரணங்களை வழங்கினர். இதில் சிதம்பரம் உதவி மின் பொறியாளர் (கிராமபுறம்) பாரி, மின் கம்பியாளர் தினேஷ், பேராசிரியர் பிரவின்குமார், சமூகஆர்வலர் பூராசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இருளர் இனமக்கள் மக்கள் தங்களில் வாழ்நாளில் வீடுகளில் முதல்முறையாக மின்சார விளக்கு எரிவதைக் கண்டு மகிழ்ச்சியுடன் கண்ணீர் மல்க சார் ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x