Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM
மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் தொகுதிகளைத் தேர்வு செய்வதில் அமைச்சர் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏ.க்கள், நிர்வாகிகளிடையே குழப்பமான நிலையே காணப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருமங்கலம்- ஆர்.பி.உதயகுமார், மேலூர் - பெரியபுள்ளான் என்ற செல்வம், மதுரை கிழக்கு- தக்கார் பி.பாண்டி, சோழவந்தான்- கி.மாணிக்கம், மதுரை வடக்கு- வி.வி.ராஜன் செல்லப்பா, மதுரை தெற்கு- எஸ்.எஸ்.சரவணன், மதுரை மத்தி- மா. ஜெயபால், மதுரை மேற்கு- செல்லூர் கே.ராஜு, திருப்பரங்குன்றம் - எஸ்.எம். சீனிவேல் , உசிலம்பட்டி- பா.நீதிபதி ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் மத்திய தொகுதி, கிழக்கு தொகுதியைத் தவிர 8 தொகுதிகளில் அதிமுக வென்றது. சீனிவேல் இறந்ததால் திருப்பரங்குன்றத்தில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வென்றார். பின்னர் அவரும் இறந்ததால் நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பா.சரவணன் வென்றார். மத்திய தொகுதியில் போட்டியிட்ட மா.ஜெயபால் அமமுகவுக்குச் சென்று விட்டார். தற்போது 7 அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் 2 பேர் அமைச்சர்கள்.
இந்நிலையில் வரும் பொதுத் தேர்தலில் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என அதிமுகவினரிடையே குழப்பமும், தவிப்பும் உள்ளது.
இதுகுறித்து அதிமுகவினர் கூறியதாவது:
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திருமங்கலத்திலும், வி.வி. ராஜன்செல்லப்பா திருப்பரங்குன்றத்திலும் போட்டியிடும் வகையில், தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டனர். பாஜகவுடன் கூட்டணி அமையும் நிலையில், தெற்குத் தொகுதியில் மீண்டும் போட்டியிட எஸ்.எஸ்.சரவணன் ஆர்வமாக உள்ளார். எம்எல்ஏ. மாணிக்கம் கட்சியின் செயல்திட்ட உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் சோழவந்தானில் போட்டியிடும் வாய்ப்பு அதிகம். மாவட்டத்தில் தனித்தொகுதி இது மட்டுமே என்பதால் அவருக்கு வேறு வழியும் இல்லை.
அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மீண்டும் மேற்குத் தொகுதியில் போட்டியிடத் தயங்குகிறார். தெற்கு தொகுதியை சரவணன் விட்டுத்தராத நிலையில், மதுரை மத்தி, வடக்கு மட்டுமே மீதம் உள்ளது. மத்தியில் பிடிஆர். மகன் பழனிவேல் தியாகராஜன் மீண்டும் போட்டியிடுவதாலும், வடக்கு பாதுகாப்பாக இருக்காது என்ற தகவலும் அமைச்சரை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. செல்லூர் ராஜூ போட்டியிடும் தொகுதி போக நகரிலுள்ள மேலும் 2 தொகுதிகளுக்கு புதிய வேட்பாளர்களைத்தான் களம் இறக்க வேண்டும். மேற்குத் தொகுதியில் போட்டியிட சமூக ரீதியதாக சிலர் விரும்பினாலும், வடக்குத் தொகுதியில் போட்டியிட யாரும் ஆர்வம் காட்டுவதாகத் தகவல் இல்லை. எம்எல்ஏ.க்கள் மேலூர் பெரியபுள்ளான், உசிலம்பட்டி நீதிபதி ஆகியோரின் நிலை தேர்தல் நெருங்கும்போதுதான் தெரியும். முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் கிழக்கு அல்லது மேலூரைக் கேட்கிறார்.
கூட்டணியில் பாஜக இணைந்தால் மதுரை கிழக்கு உள்ளிட்ட 2 தொகுதிகளை ஒதுக்கும் நிலை ஏற்படும். தற்போதைய நிலையில், உதயகுமார், சரவணன், மாணிக்கம் ஆகியோர் மீண்டும் அதே தொகுதியிலும், ராஜன்செல்லப்பா, செல்லூர் ராஜூ ஆகியோர் தொகுதி மாறி நிற்கும் நிலையில், மீதம் உள்ள 5 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கியது போக, மற்ற தொகுதிகளின் வேட்பாளர்களில் மாற்றம் நடக்க அதிக வாய்ப்புள்ளது. இதை திமுக தரப்பும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT