Published : 10 Nov 2020 03:11 AM
Last Updated : 10 Nov 2020 03:11 AM

பெரம்பலூர் அருகே கோழிப் பண்ணைகளில் பதுக்கப்பட்ட 483 டன் வெங்காயம் பறிமுதல்: திருச்சியை சேர்ந்த 3 வியாபாரிகளை கைது செய்ய நடவடிக்கை

பெரம்பலூர் மாவட்டம் கூத்தனூர் சாலையில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெரிய வெங்காய மூட்டைகளை நேற்று பறிமுதல் செய்யும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே 4 இடங்களில் கோழிப் பண்ணைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 483 டன் பெரியவெங்காயத்தை குடிமைப் பொருள்குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர்.

வெங்காயத்தின் விலை வேகமாக உயர்ந்து வரும்நிலையில் தீபாவளி பண்டிகையும் வருகிறது. இதனால், வெங்காயத்தின் விலைமேலும் உயரக்கூடும் என்பதால் திருச்சியைச் சேர்ந்த வெங்காய மொத்த வியாபாரிகள் வெளிமாநிலங்களில் இருந்து வெங்காயத்தை கொண்டு வந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில்நேற்று முன்தினம் அங்கு சென்றுஆய்வு செய்த பெரம்பலூர் மாவட்டவேளாண் அதிகாரிகள், வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது குறித்த தகவலை மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்தனர். அவற்றை பறிமுதல் செய்ய மாவட்ட ஆட்சியர் வெங்கடபிரியா நேற்று உத்தரவிட்டார்.

இதையடுத்து, திருச்சி உட்கோட்ட குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார் பெரம்பலூர் மாவட்டத்தில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோழிப்பண்ணைகளில் நேற்று சோதனை நடத்தினர்.

இரூர் கிராமத்தில் உள்ள முத்துச்செல்வம் என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் இருந்து 100 டன், கூத்தனூர் சாலையில் உள்ள ரவிச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் இருந்து 71 டன், சத்திரமனை கிராமத்தில் உள்ள அழகேசன் என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் இருந்து 202 டன் மற்றும் நடராஜன் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் இருந்து 110 டன் எனமொத்தம் 483 டன் பெரிய வெங்காயத்தை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்த வெங்காயம் முழுவதும் பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இவற்றில் பயன்பாட்டுக்கு உகந்த வெங்காயம் கூட்டுறவு அங்காடிகள் மூலம் குறைந்த விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருச்சியைச் சேர்ந்த வெங்காய மொத்த வியாபாரிகள் 3 பேர், 2மாதங்களுக்கு முன்பு பெரிய வெங்காயம் கிலோ ரூ.15-க்கு விற்பனையானபோது வெளி மாநிலங்களில் இருந்து வாங்கிவந்து, அவற்றை இங்குள்ள கோழிப்பண்ணைகளில் பதுக்கி வைத்திருந்ததும், தீபாவளி பண்டிகை காலத்தில் விலைரூ.100-க்கும் அதிகமாக உயரும்போது இந்த வெங்காயத்தை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததும் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

கோழிப்பண்ணை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்திவரும் குடிமைப் பொருள் போலீஸார், அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் தடுப்பு பிரிவின் கீழ் திருச்சியைச் சேர்ந்த வெங்காய வியாபாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x