Published : 09 Nov 2020 03:11 AM
Last Updated : 09 Nov 2020 03:11 AM
திருப்பூரில் அதிமுகவினர் சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மன்றம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு வந்த மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனின் காரை அக்கட்சி நிர்வாகிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் கே.வி.ஆர்.நகர் பகுதியில் மாநகர் மாவட்ட அதிமுகவின் கீழ் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மன்ற திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மாநகர் மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் மன்றத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து 500-க்கும் மேற் பட்டவர்களுக்கு வேட்டி மற்றும் சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழா முடிந்த நிலையில் எம்.எஸ்.எம்.ஆனந்தனை, அதிமுக மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, அதிமுக 56-வது வட்ட கிளை செயலாளர் பொன் மருதாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள் முற்றுகை யிட்டனர்.
விழாவுக்கு முக்கிய நிர்வாகி களுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறி, அவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதனால் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தரப்பினருக்கும், முற்றுகையிட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மாவட்டச் செயலாளர் காரை முற்றுகையிட்ட நிர்வாகிகள், சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சி அலுவலகத்துக்கு பேச்சுவார்த்தை நடத்த வருமாறு தெரிவிக்கப்பட்டதால், அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக முதல்வர் கடந்த 6-ம் தேதி திருப்பூருக்கு வந்து சென்ற நிலையில், மாநகர் மாவட்ட அதிமுகவினருக்குள் இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது உட்கட்சி பூசலை தெளிவாக காட்டியுள்ளதாக சக கட்சியினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து எம்.எஸ்.எம்.ஆனந்தன் தரப்பில் கேட்டபோது, ‘‘இச்செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் புதிதாக பொறுப்புக்கு வந்தவர்கள். அப்பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தை இவர்கள் செயல்படவிடுவதில்லை.
தொடக்ககாலம் முதல் கட்சியில் இருப்பவர்கள், அவர்களாக பாசறை அலுவலகம் அமைத்து திறக்க அழைப்பு விடுத்தனர். கட்சியினர் அழைத்தால் செல்ல வேண்டியது மாவட்டச் செயலாளரின் கடமை. எதிர் கருத்து கொண்டவர்களை பேச்சு வார்த்தைக்கு கட்சி அலுவலகம் வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உள்நோக்கத்தோடு இப்பிரச்சினையை கிளப்பியுள்ளனர்’’ என்றனர்.
மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதியிடம் கேட்டபோது, ‘‘மாவட்டச் செயலாளர் ஒரு பகுதிக்கு செல்லும்போது அங்குள்ள நிர்வாகிகளுக்கு தகவல் அளிக்க வேண்டும். விழா குறித்து கட்சியின் கிளை முக்கிய நிர்வாகிகள் யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. மன்றத்தில் வேறு பகுதிகளை சேர்ந்தவர்களை நிர்வாகிகளாக நியமித்துள்ளனர்.
பொறுப்பில் இல்லாத சிலரை வைத்து மன்றம் திறந்துள்ளனர். பேச்சுவார்த்தைக்கு 5 பேரை மட்டும் வரக்கூறியதால் செல்ல வில்லை. கட்சியை பிரிக்கும் நோக்கில் மாவட்டச் செயலாளர் செயல்படுகிறார். இதை முறையாக கட்சி தலைமைக்கு தெரியப்படுத்தியுள்ளோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT