Published : 08 Nov 2020 03:12 AM
Last Updated : 08 Nov 2020 03:12 AM
வெளி மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், சேலம் மாவட்டத்தில் பெரிய வெங்காயம் விலை கிலோ ரூ.40 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.
பெரிய வெங்காயம் அதிகம் விளையக்கூடிய கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு மாதத்துக்கு முன்னர் தென்மேற்குப் பருவமழை கொட்டித் தீர்த்தது. இதனால், அங்கிருந்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வெங்காய மூட்டைகள் வருவது பாதிக்கப்பட்டது.
இதனால், வெங்காயத்தின் விலை கிலோ ரூ.100-க்கும் மேல் விற்பனையானது. தமிழக அரசு பண்ணை பசுமைக் கடைகள், கூட்டுறவு அங்காடிகள் மூலம் மலிவு விலைக்கு வெங்காயத்தை விற்பனை செய்தது.
இந்நிலையில், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மழை குறைந்ததை தொடர்ந்து அங்கிருந்து வெங்காய மூட்டைகள் சேலத்துக்கு வருவது அதிகரித்துள்ளது. இதனால், வெங்காயத்தின் விலை கிலோ ரூ.40 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக வெங்காய வியாபாரி லட்சாதிபதி கூறியதாவது:
பெங்களூரு, மைசூரு, தாவணகரே, பெல்லாரி உள்ளிட்ட பகுதிகளில் வெங்காயம் அறுவடை மீண்டும் தொடங்கிவிட்டதால், சந்தைக்கு புதிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே, அங்குள்ள கிடங்குகளில் இருந்த பழைய வெங்காயமும் விற்பனைக்கு வருகிறது. தேவையான அளவுக்கு வெங்காய மூட்டைகள் கிடைத்து வருகின்றன.
பழைய வெங்காயத்தை ஒரு வாரம் வரை இருப்பு வைக்க முடியும். புதிய வெங்காயம் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே நன்றாக இருக்கும். எனவே, புதிய வெங்காயத்தின் விலை குறைவாக இருக்கிறது. வெங்காயம் தரத்துக்கு ஏற்ப கிலோ ரூ.40 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. தலைவாசல் மார்க்கெட்டுக்கு தற்போது நாளொன்றுக்கு 5 முதல் 7 டன் வரை வெங்காயம் வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT