Published : 03 Nov 2020 11:21 AM
Last Updated : 03 Nov 2020 11:21 AM
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற மன்னார்குடி அருகே அவரது பூர்வீக கிராமமான துளசேந்திரபுரத்தில் கமலா ஹாரிஸ் குடும்பத்தினரின் குலதெய்வ கோயிலில் கிராம மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவ. 3) நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் ஆகியோர் அதிபர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.
ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இவர் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். கமலா ஹாரிஸின் தாத்தா பி.வி.கோபாலனின் மூத்த மகள் சியாமளா கோபாலன் மகள்தான் கமலா ஹாரிஸ்.
இந்த நிலையில், துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள அவரது குடும்பம் வழிபாடு செய்த பூர்வீக குலதெய்வக் கோயிலான தர்மசாஸ்தா கோயிலில் துளசேந்திரபுரம் கிராம மக்கள் இன்று வழிபாடு செய்தனர். தொடர்ந்து, கமலா ஹாரிஸ் தனக்குப் பிடித்த உணவு எனக் கூறிய இட்லி, வடை பிரசாதமாக வழங்கப்பட்டது.
மேலும், கிராமம் முழுவதும் விளம்பரப் பதாகைகள் வைத்து கமலா ஹாரிஸ் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT