Published : 01 Nov 2020 03:14 AM
Last Updated : 01 Nov 2020 03:14 AM
வேலூரில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் நடத்திய சோதனை குறித்து விளக்கம் கேட்டு 3 டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டதாக வந்த புகாரின் பேரில் வேலூரில் உள்ள 3 மதுபானக் கடைகளில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டனர். லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஹேமசித்ரா மேற்பார்வையில் மூன்று குழுக்கள் விடிய, விடிய நடத்திய சோதனை மறுநாள் (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு நிறைவு பெற்றது.
இதில், வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கடையில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்றதன் மூலம் கிடைத்த 12 ஆயிரம் ரூபாய் மற்றும் கணக்கில் வராமல் பதுக்கி வைத்திருந்த 60 மதுபான பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பென்னாத்தூரில் உள்ள ஒரு கடையில் ரூ.14 ஆயிரத்து 720 பணமும், அதே பகுதியில் உள்ள மற்றொரு கடையில் ரூ.34 ஆயிரத்து 720 பணமும் கைப் பற்றப்பட்டது.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் நடத்திய சோதனைக்குப் பிறகு மிலாது நபி விடுமுறை காரணமாக மூடப்பட்டிருந்த மூன்று கடை களும் நேற்று வழக்கம்போல் திறக்கப்பட்டு மதுபான பாட்டில் விற் பனை நடைபெற்றது. சோதனை நடைபெற்ற மூன்று கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப் பட்டுள்ளதாகவும் அவர்கள் பணியில் இருந்து விரைவில் விடுவிக்கப் பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘‘லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் நடத்திய சோதனைக்குப் பிறகு கடைகளில் அதிகளவு மதுபான பாட்டில்களை இருப்பு வைக்க வேண்டாம் என்றும் 2 நாட்களுக்குத் தேவையான மதுபான பாட்டில்களை மட்டும் இருப்பு வைக்கவும் கூடுதல் விலைக்கு மதுபான பாட்டில்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் நடத்திய சோதனை தொடர்பாக 3 டாஸ்மாக் மதுபான கடைகளின் பணியாளர்களிடம் விளக்கம் பெற நோட்டீஸ் வழங்கப்படும்.
அதேபோல், லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT