Published : 30 Oct 2020 01:05 PM
Last Updated : 30 Oct 2020 01:05 PM
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை குறித்துப் பரிசீலித்து இட ஒதுக்கீடு இந்த ஆண்டே கிடைக்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுக தலைவரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று (அக். 30), முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58-வது குருபூஜை ஆகியவற்றை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின்னர், செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்தார்.
உள் இட ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கூறியதால் நாங்கள் செய்யவில்லை. மக்களும் போராடவில்லை. நாங்களாகவே செய்தோம் என்று முதல்வர் அரசாணை வெளியிட்டிருக்கிறார். அது குறித்து உங்களது கருத்து?
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நிர்வாகம் எந்த அளவுக்கு மோசமாகப் போயிருக்கிறது என்பதற்கு இதுவே ஓர் உதாரணம். இதை மசோதாவாக நிறைவேற்றுவதற்கு முன்பே இந்தச் சிந்தனை அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். அந்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியதற்குப் பிறகு, அதற்குரிய அழுத்தத்தையாவது கொடுத்திருக்க வேண்டும்.
இதைக் கண்டித்துத்தான் திமுகவின் சார்பில் நாங்கள் போராட்டத்தை நடத்தி மக்களுக்கு எடுத்துச் சொன்னோம் என்பது நாட்டுக்கு நன்றாகத் தெரியும். திமுக அரசியல் செய்வதாக எடப்பாடி பழனிசாமி சொன்னார். நான் முன்பே இதற்குப் பதில் சொல்லியிருக்கிறேன்.
எதிர்க்கட்சியைப் பொறுத்தவரையில் அரசியல் செய்யாமல் அவியலா செய்து கொண்டிருக்கும் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். அதுதான் இன்றைக்கும் நான் சொல்லக்கூடிய பதில்.
இப்போது இந்த அரசாணை வெளியிட்டிருப்பதை நேற்று நான் வரவேற்று இருக்கிறேன். ஆனால், அவர்கள் வெளியிட்டிருக்கும் இந்த அரசாணை உடனடியாக, இனிமேலாவது காலம் தாழ்த்தாமல் கவுன்சிலிங் முறையை விரைவுபடுத்தி, அதை நடத்தி, இந்த ஆண்டே அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திட வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இரண்டு விதமான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. இந்த அரசாணை சட்டரீதியாகச் செல்லுமா? செல்லாதா? யாராவது நீதிமன்றத்திற்குச் சென்றால் இந்த அரசாணை நிற்குமா? நிற்காதா? என்ற ஒரு நிலை இருந்து வருகிறது.
எனவே, இதையெல்லாம் பரிசீலித்து அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி 7.5 சதவீதம் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை இந்த அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்தி, வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT