Published : 26 Oct 2020 11:53 AM
Last Updated : 26 Oct 2020 11:53 AM

குமரி மாவட்டத்தில் தோட்டக்கலைக் கல்லூரி: வேளாண் பல்கலை. துணைவேந்தரிடம் விவசாயிகள் கோரிக்கை

துணைவேந்தருடன் விவசாயிகள்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண் துறையில் வருங்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து, தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்.குமாரைக் குமரி மாவட்ட விவசாயிகள் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.

குமரி மாவட்டம், திருப்பதிசாரத்தில் உள்ள நெல் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குமார் கன்னியாகுமரி வந்திருந்தார். அவரைச் சந்தித்த குமரி மாவட்ட விவசாயிகள், மாவட்டத்தில் விவசாயிகளின் இப்போதைய தேவை குறித்து பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.

இதுகுறித்து குமரி மாவட்ட வேளாண்மை உற்பத்திக்குழு உறுப்பினர் செண்பக சேகரன்பிள்ளை 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் கூறுகையில், ''பாலை நீங்கலாக நான்கு வகை நில அமைப்போடு, சகல வளங்களும் நிறைந்த நாஞ்சில் நாட்டில் தோட்டக்கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். திருப்பதிசாரம் பகுதியில் அமைக்கப்பட்ட நெல் ஆராய்ச்சி நிலையம், சமீபத்தில் வேளாண் அறிவியல் நிலையத்துடன் இணைக்கப்பட்டுவிட்டது. இதனால் இந்த நெல் ஆராய்ச்சி மையம் தன் தனித்துவத்தை இழந்துவிட்டது. அத்தோடு இங்கு நெல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் கொண்ட விஞ்ஞானிகளைத் தலைவராக நியமிக்காமல் பிறதுறை வல்லுநர்களை நியமித்திருப்பதால் ஆராய்ச்சி நிலையச் செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்க திருப்பதிசாரம் நெல் ஆராய்ச்சி மையத்தை முன்பு போல் தன்னிச்சையாக, சுதந்திரமாகச் செயல்படச் செய்யவேண்டும்.

மேலும், இந்த நெல் ஆராய்ச்சி மையத்தில் நவீனக் கட்டமைப்புகளோடு கிட்டங்கி வசதி, தானியம் பிரித்து எடுப்பதற்கான தளம், நவீன தானியங்கி விதை சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியவற்றை நிறுவவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். குமரி மாவட்டத்தில் ஆண்டுக்கு இரு பருவமழை பொழிகிறது. இதுபோக நான்கு மாதங்கள் பனிப்பொழிவும் இருக்கிறது. இதனால் காற்றில் 80 சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம் இருக்கும் இங்கு, பூச்சி, பூஞ்சான் நோய்களுக்கும் பஞ்சமில்லை. இங்கு மூன்று ஆராய்ச்சி நிலையங்கள், ஒரு வேளாண் அறிவியல் நிலையம் இருந்தும்கூட ஒரு பூச்சியியல் வல்லுநர் இல்லாதது குறையாக உள்ளது. இதைப் போக்க பூச்சியியல் வல்லுநரை நியமிக்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் பஞ்ச காலத்தின்போது உணவுப் பொருளாகக் கைகொடுத்ததே மரவள்ளிக் கிழங்குதான். மீலிபக் பூச்சி தாக்குதலால் இப்போது மரவள்ளிக் கிழங்கு சாகுபடி வெகுவாகக் குறைந்து வருகிறது. சேலத்தில் உள்ள ஸ்டார்ச் ஆலைகளுக்கும், கேரளத்தின் உணவுத் தேவைக்கும் மரவள்ளிக் கிழங்கை அனுப்பிவைத்த குமரி மாவட்டம் இன்று உள்ளூர்த் தேவைக்கே வெளியூரில் இருந்து மரவள்ளி எடுக்கும் நிலையில் இருக்கிறது. எனவே இங்கு மரவள்ளி சாகுபடியை மீண்டும் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈத்தாமொழி தென்னைக்குப் புவிசார் குறியீடு உள்ளது. ஆனால், அப்படிப்பட்ட தென்னையில் ரூகோஸ் வெள்ளைச் சுருள் ஈ, கேரளா வாடல் நோய் மற்றும் மஞ்சள் நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் தேங்காய் சாகுபடியே கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்தும் கள ஆய்வு செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கைகள் உள்ளிட்ட குமரி மாவட்ட விவசாயிகள் சந்திக்கும் முக்கியப் பிரச்சினைகளையும் தீர்க்க வலியுறுத்தினோம்.

வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இதுகுறித்து முழுமையாக ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். இந்த நெருக்கடியான கரோனா நேரத்தில் விவசாயிகளுக்கு நேரம் ஒதுக்கி, எங்கள் குரலுக்கும் செவிமடுத்தார் துணைவேந்தர். அதனால் எங்களது கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் கைகூடும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x