Published : 25 Oct 2020 11:49 AM
Last Updated : 25 Oct 2020 11:49 AM
மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்தது பழையூர்பட்டி. வெள்ளலூர் நாடு என்ற பிரிவில் அடங்கிய ஊர்களில் இவ்வூர் முக்கியமானது. சுமார் 300 குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. புகழ்பெற்ற மேடை நாடகக் கலைஞர் ராமையா, இயக்குநர் சேரன் இவ்வூரைச் சேர்ந்தவர்கள். இங்குள்ள ஊருணியும், கிணறு களும் அவ்வூர் மக்களின் நீராதாரம். இந்த ஊருணி 30 ஆண்டுகளுக்கும் மேலாக தூர் வாராமல் இருந்ததால் வறண்டு கிடந்தது.
இந்நிலையில், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட பிரதான் என்ற தனியார் நிறுவனத்தின் முயற்சியில் கிராம மக்களும், விவசாயிகளும் ஒருங்கிணைந்து இந்த ஊருணியை சீரமைத்துள்ளனர். தற்போது ஊருணியில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கருப்பையா.உஷா இளையராஜா இது குறித்து ஊர் அம்பலகாரர் கருப்பையா கூறியதாவது; பழையூர்பட்டி வேளாண் நீர்வள ஆதார பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் நாங்கள் இயங்குகிறோம். தனியார் அமைப்பின் நிதி உதவியோடும், கிராம மக்களின் பங்களிப்போடும் ஊருணியை ஆழப்படுத்தி சீரமைத்துள்ளோம். ஊருணி கரையை உயர்த்தி மரக்கன்றுகளை நட உள்ளோம் என்றார்.
கோட்டநத்தம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் உஷா இளையராஜா கூறுகையில், ஊராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியதன்பேரில் ஊருணி மேம்படுத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக ஊருணியைச் சுற்றிவேலி அமைத்துப் பராமரிக்கும் பணியை ஒன்றிய நிர்வாகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தனியார் அமைப்பின் திட்டத் தலைவர் ரா.சீனிவாசன் கூறுகையில், ‘‘எங்களது நிறுவனம் சார்பில் ரூ.1.40 லட்சமும், ஊர் மக்களின் நன்கொடை, கருவிகள் மற்றும் உழைப்பு மதிப்பாக சுமார் ரூ.2.30 லட்சத்தில் பணிகளை முடித்தோம். மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் 24 கிராமங்களில் நீர்நிலை சீரமைப்புப் பணிகளை உள்ளூர் மக்களுடன் இணைந்து மேற்கொண்டு வரு கிறோம்.’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT