Published : 24 Oct 2020 03:53 PM
Last Updated : 24 Oct 2020 03:53 PM
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் அண்மையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காலியாக அறிவிக்கப்பட்ட இந்தத் தொகுதிக்கு, வரும் பிப்ரவரிக்குள் தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சீட் பெறக் கடும் போட்டி நிலவுகிறது. வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தன் தந்தையின் பாணியில் அரசியல் பயணங்களை முன்னெடுத்து வருகிறார். இதனால் அவருக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெறுவதற்கு முன்பே தொகுதிக்குள் தன் சொந்தப் பணத்தில் இருந்து வசந்தகுமார் பல்வேறு நலப்பணிகளைச் செய்து வந்தார். மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு பணப்பரிசு வழங்குவது, நவம்பர் 1-ம் தேதி குமரி மாவட்டம் தாய்த் தமிழகத்தோடு இணையப் பாடுபட்ட தியாகிகளை அழைத்து விழா எடுத்து கவுரவிப்பதோடு அவர்களுக்கு உதவிகள் செய்வது, தொகுதிக்குள் ஆயிரக்கணக்காணோருக்கு அவ்வப்போது நலஉதவிகள் செய்வது ஆகியவற்றை வசந்தகுமார் செய்து வந்தார்.
அதுமட்டும் இல்லாமல் வசந்த் அன்ட்கோ விளம்பரத்தில் வருவதைப் போலவே எப்போதும் சிரித்த முகத்துடன் சாமானியரையும் அணுகினார். தான் பதவியில் இல்லாதபோதே கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்குள் சொந்த நிதியில் இருந்து பல்வேறு வளர்ச்சிப்பணிகளைச் செய்தவர், நாங்குநேரி எம்.எல்.ஏவாக இருந்த போது தன் சொந்தப்பணத்தில் இருந்து அங்குள்ள நீராதாரங்களைப் புனரமைத்தார்.
அவரது மகன் விஜய் வசந்த் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராக இருந்தாலும், வசந்தகுமார் உயிரோடு இருந்தவரை முழுமூச்சாக அரசியலில் ஈடுபடவில்லை. வசந்தகுமாரின் மறைவுக்குப் பின்பு தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வரும் விஜய் வசந்த், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியைக் குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார். இதில் தன் அப்பாவின் பாணியிலான அரசியலையே கையில் எடுத்துள்ளார் விஜய் வசந்த்.
தொகுதிக்குள் தினசரி ஒவ்வொரு கிராமமாகப் போய் வசந்தகுமார் பெயரிலேயே கபசுரக் குடிநீர் வினியோகம் செய்கிறார். அதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒன்றே கால் லட்சம் ரூபாய் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியைத் தன் சொந்த செலவில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் விஜய் வசந்த்.
முன்னதாக வசந்தகுமார் நாகர்கோவிலில் முகாம் இல்லம் அமைத்து இருந்தார். இந்த இல்லத்தின் வழியாக உதவி கேட்டு வருபவர்களுக்கு திருமணகால உதவி, கல்வி உதவி, கைம்பெண், மாற்றுத்திறனாளிகள், முதியோர் பென்சன் திட்டத்துக்கும் அரசு வழியாக முயற்சிக்கப்பட்டது. அதில் உதவித்தொகை கிடைக்காதவர்களுக்குத் தன் சொந்தப்பணத்தில் இருந்தே மாதாந்திர உதவித் தொகையை வழங்கி வந்தார் வசந்தகுமார். இப்படி வழங்கப்பட்டு வந்த உதவித் தொகைகளை நிறுத்தாமல் அதேபோல் வழங்கி வருகிறார் விஜய் வசந்த். தன் அப்பாவின் பாணியிலேயே விஜய் வசந்த் முன்னெடுக்கும் அரசியல் ஒருபக்கம் இருக்க, கன்னியாகுமரி தொகுதியை குறிவைத்து காங்கிரஸில் பெரும்படையே இருக்கிறது.
குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் சிட்டிங் எம்.எல்.ஏக்களாக இருக்கும் பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதரணி மூவருமே சீட் கேட்கும் ரேஸில் இருக்கிறார்கள். குளச்சல் தொகுதியில் இருந்து ஏற்கனவே இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரின்ஸ்க்கு அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் என்னும் சூழல் உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்திய போராட்டங்களுக்காக மட்டுமே 30-க்கும் அதிகமான வழக்குகளைச் சுமக்கும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி லாரன்ஸ், இதே குளச்சல் தொகுதியைச் சட்டப்பேரவைக்குக் குறிவைப்பதால் நாடாளுமன்றத் தேர்தல் நோக்கி நகரும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறார் பிரின்ஸ்.
இதேபோல் விளவங்கோடு எம்.எல்.ஏ விஜயதரணியும் எம்.பி சீட் ஆசையில் இருக்கிறார். கடந்தமுறை இந்தத் தொகுதி வசந்தகுமாருக்கு ஒதுக்கப்பட்டபோது நேரடியாகவே அதற்கு விஜயதரணி எதிர்ப்புத் தெரிவித்து இருந்தார். இதுபோக முன்னாள் மாவட்டத் தலைவர் ராபர்ட் புரூஸ் தொடங்கி பெரும்படையே சீட்டுக்காக காத்திருக்கிறது.
இவைகளுக்கு மத்தியில் அப்பாவின் பாணியில் அரசியல் செய்து, கட்சி வாய்ப்பளித்தால் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவேன் என அறிவித்துக் களத்தில் நிற்கும் விஜய்வசந்துக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT