Published : 23 Oct 2020 10:12 AM
Last Updated : 23 Oct 2020 10:12 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்சியில் ஆட்களை சேர்ப்பதில் திமுக, அதிமுக இடையே போட்டி: பலத்தை நிரூபிக்க களத்தில் தீவிரம்

திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் அதிமுகவில் நேற்று முன்தினம் இணைந்த திமுக மற்றும் அமமுகவினர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்சியில் ஆட்களை சேர்ப்பதில் திமுக, அதிமுக இடையே போட்டி நிலவுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், தங்களை பலப்படுத்தும் முயற்சியில் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றன. அதற்கு முன் னோட்டமாக, “கட்சிக்குள் ஆட்களை சேர்க்கும் பணியில்” ஈடுபட்டுள்ளனர். இதில், புதிய வரவுகள் மட்டுமின்றி, பிற கட்சிகளில் உள்ளவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படு கிறது. இதுபோன்ற நிகழ்வுகளை மாவட்டம் முதல் மாநிலம் வரை காணலாம். அந்த வரிசையில் திருவண்ணாமலை மாவட்டமும் இடம் பிடித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் என்பது, திமுக மற்றும் அதிமுக வின் கோட்டையாக உள்ளது. இந்த இரண்டு கட்சிகளின் ஆதிக்கமே, ஒவ்வொரு தேர்தல்களிலும் எதிரொலிக்கும். இதனால், கட்சிக்குள் ஆட்களை சேர்க்கும் பணியில், திமுக மற்றும் அதிமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தெற்கு மாவட்டச் செயலாளராக உள்ள திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவும், அதிமுகவில் தெற்கு மாவட்டச் செயலாளராக உள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் கட்சியில் ஆட்களை சேர்ப்பதில் மும்முரமாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

இதேபோல், தி.மலை வடக்குமாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே.மோகன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலசப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோரும் களத்தில் இறங்கி உள்ளனர். வடக்கு மாவட்ட திமுக பொறுப் பாளராக தரணிவேந்தன் இருந்தாலும், எ.வ.வேலுவின் ஆதிக்கமே தி.மலை மாவட்டம் முழுவதும் உள்ளது.

இதற்கிடையில், திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக, நாங்களும் களத்தில் உள்ளோம் என பாஜக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் அவ்வப்போது தங்களை முன்னிலைப்படுத்தி வருகின்றன.

முன்னாள் அமைச்சரும் தி.மலை சட்டப்பேரவை உறுப்பினருமான எ.வ.வேலு முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்த அதிமுக மற்றும் பாமகவினர்.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “புதிய உறுப்பினர்களை சேர்ப்பதில், அரசியல் கட்சிகள் ஆர்வம் செலுத்தி வந்த காலம் மலையேறி விட்டது. பெயரளவில் மட்டுமே புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர். அதற்கு மாற்றாக, பிற கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தங்கள் பக்கம் இழுக்கும் பணி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதிலும், முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களின் வருகைக்கு பிரத்யேக வரவேற்பு இருக்கும். அனைத்து நிலைகளிலும், கட்சி தாவல் அரங்கேற்றம் உள்ளது. அதிலும், ஒரு நேர்மையை காணலாம். கூட்டணி தர்மத்தை மீறமாட்டார்கள். தங்களுடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சியில் இருப்பவர்களை, தங்கள் வசம் இழுக்கமாட்டார்கள்.

பிற கட்சியினரை தங்களது கட்சியில் சேர்ப்பதன் மூலம், தங்கள் கட்சிதான் செல்வாக்கு பெற்றது என மக்களிடம் விளம்பரப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒரு மாயையை ஏற்படுத்தி வருகின்றனர். இவர்கள் இவ்வாறு என்றால், கட்சி தாவலில் ஈடுபடுபவர்களும், எதிர்கால ஆதாயத்தை முன்வைத்துதான் மாற்றுக் கட்சிக்குள் இணைகின்றனர். கட்சியில் பதவி, தேர்தல் சீட்டு, ஒப்பந்த பணி, தொழில் ரீதியான அணுகூலம் என ஏதாவது ஒரு கனவு திட்டத்துடன் தான் வந்து சேருகின்றனர். இது போன்ற கட்சி தாவலால் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடாது.

அரசியல் கட்சிகளை தேடி, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பட்டாளம் தன்னெழுச்சியாக வரும்போதுதான் மாற்றத்தை காணமுடியும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x