Last Updated : 19 Oct, 2020 03:09 PM

1  

Published : 19 Oct 2020 03:09 PM
Last Updated : 19 Oct 2020 03:09 PM

சிதம்பரம் அருகே மணல் திருட்டு தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் மீது டிராக்டர் ஏற்றிக் கொலை  முயற்சி

கடலூர்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணல் திருட்டைத் தடுக்க முயன்ற உதவி ஆய்வாளர் மீது டிராக்டரை ஏற்றிக் கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. இது குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சிதம்பரம் அருகே மேலமூங்கிலடி கிராமத்தில் உள்ள வெள்ளாற்றுப் பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருவதாகப் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து மணல் திருட்டு தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையில் 4 போலீஸார் நேற்று (18-ம் தேதி) இரவு 12.30 அளவில் மேல மூங்கிலடி வெள்ளாற்றுப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆற்றுப் பகுதியில் இருந்து மணலை ஏற்றி வந்த ஒரு டிராக்டரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால், டிராக்டரை நிறுத்தாமல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றனர். பின்னர் சிறிது தூரத்தில் டிராக்டரை நிறுத்திவிட்டு 2 பேர் ஓடியுள்ளனர். இதில் போலீஸாரின் இருசக்கர வாகனம் சேதம் அடைந்தது. போலீஸாருக்கு எந்த விதமான காயமும் ஏற்படவில்லை.

இதனையடுத்து போலீஸார் மணல் ஏற்றி வந்த டிராக்டரைப் பறிமுதல் செய்து, காவல் நிலையம் எடுத்துச் சென்றனர். இதுகுறித்து மணல் திருட்டு தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் சுப்ரமணியன் மற்றும் போலீஸார் சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

சிதம்பரம் டிஎஸ்பி லாமேக், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். மேலும் போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து டிராக்டரில் இருந்து தப்பி ஓடியவர்களைத் தேடி வருகின்றனர்.

போலீஸாரையே டிராக்டர் ஏற்றிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x