Published : 17 Oct 2020 11:32 AM
Last Updated : 17 Oct 2020 11:32 AM
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டா் சி.பி.இராமசாமி ஐயா் நுாலகத்தில் உள்ள அனைத்து தரவுத்தளம், இதழ்கள் மற்றும் மின்னூல் உள்ளிட்ட ஆராய்ச்சி ஆதாரங்களை அவரவா் வீட்டிலிருந்து பயன்பாட்டில் எடுத்துக் கொள்ள ஏதுவாக தொலைநிலை அணுகல் சேவையை பல்கலைக்கழக துணைவேந்தா் முருகேசன் நேற்று தொடக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், “ஆராய்ச்சி மாணவா்கள், ஆசிரியர்கள் மற்றும் மேற்படிப்பு மாணவா்கள் அனைவரும் தற்போதைய ‘கோவிட் 19’ ஊரடங்கு தருணத்தில் பல்கலை கழகம் வராமலேயே தங்கள் வீட்டிலிருந்தபடி ஆராய்ச்சி மற்றும் கல்வி பணி தொடர ஏதுவாக இச்சேவை தொடங்கப்படுகிறது.
அதன்படி, அண்ணாமலை பல்கலைக்கழக மைய நூலக அனைத்து மின் வளங்களையும் தங்களின் கைபேசி மூலமாக அல்லது கணினி மூலமாக தரவிறக்கம் செய்து கொள்ள அண்ணாமலை பல்கலைக்கழகம், ‘மைலோஃப்ட்’ (MYLOFT) என்ற இணையதளம் வாயிலாக சேவை தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.
‘மைலோஃப்ட்’ என்பது ‘MY LIBRARY ON FINGER TIP‘ என்பதன் சுருக்கம். அதாவது ‘எனது விரல் நுனியில் என் நுாலகம்’ என்பதை உணர்த்தும் வகையில் இந்தப் பெயரை வைத்திருக்கிறோம். கைபேசி மூலமாக அனைத்து ஆராய்ச்சி இதழ்கள் மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகள் வீட்டிலிருந்தபடியே பதிவிறக்கம் செய்துகொள்ள ஏதுவாக நுாலக சேவை இந்த லாக் டவுன் சமயத்தில் வாசகா்களுக்காக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இச்சேவையை பல்கலைக் கழகத்தின் அனைத்து ஊழியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், அனைத்து துறை மாணவர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு பல்கலைக்கழக நூலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியா் மற்றும் நூலகா் சாதிக் பாட்சா ஏற்பாடு செய்திருந்தார். உதவி நூலகர் முனைவா் பாலகிருஷ்ணன், உதவிப் பேராசிரியர்கள் ஜெகன், லதா மற்றும் நூலக ஊழியா்கள் கலந்து கொண்டனர்.
இச்சேவையை பல்கலைக் கழகத்தின் அனைத்து ஊழியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், அனைத்து துறை மாணவர்கள்பயன்படுத்திக் கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT